Monday, December 31, 2012

வில்லாபுரத்தில் பெண்ணிடம் 3 1/2 பவுன் நகை பறிப்பு 
வில்லாபுரத்தில் பெண்ணிடம் 3 1/2 பவுன் நகை பறிப்பு
அவனியாபுரம், டிச. 31-

மதுரை வில்லாபுரம் அவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன், நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி அனிதா (வயது30). நேற்று இரவு, இவர் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, பின் தொடர்ந்து வந்த “மர்ம” மனிதன் ஒருவன், அனிதா மீது பாய்ந்து, அவரது கழுத்தில் கிடந்த 3 1/2 பவுன் நகையை பறித்துள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா, திருடன்... திருடன்... என கத்தினார். ஆனால் அந்த வாலிபர், அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற இருவரோடு சேர்ந்து மின்னல் வேகத்தில் தப்பி விட்டான். இதுகுறித்து அனிதா போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ ராஜ், ஏட்டுகள் ஜோசப், தனபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கங்குலி?: பி.சி.சி.ஐ. ஆலோசனை
இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அவரது தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்திய அணி பெறவில்லை. தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. அவரது பயிற்சி திருப்தி பெரும்பாலான வீரர்களுக்கு அளிக்காததால், அவரது பதவிக்காலத்தை பி.சி.சி.ஐ. நீட்டிக்காது என்று தெரிகிறது.

இதற்கிடையே சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணிக்கு இந்திய பயிற்சியாளர் தேவை. போதிய திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் இந்தியாவில் உள்ளனர்’ என்றார். எனவே, இந்தியாவில் உள்ள முன்னாள் வீரர்களில் ஒருவரை அடுத்த பயிற்சியாளராக தேர்வு செய்ய, குறிப்பாக கங்குலியை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்குலி, 113 டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் 35 அரை சதங்களுடன் 7212 ரன்கள் எடுத்துள்ளார். 311 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 72 அரை சதங்களுடன் 11363 ரன்கள் சேர்த்துள்ளார்.