மதுரை காமராஜ் பல்கலையில் 176 "கிளார்க்' பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் காலியாக உள்ள 176 "கிளார்க்'குகள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப, பத்து ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, அரசு ஒதுக்கீடு அடிப்படையில் 176 "கிளார்க்'குகள், வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர்கள் 35 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப, பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கிளார்க் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் இளங்கலை பட்டத்துடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். வாட்ச்மேன் துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர் பணிகளுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதித்தேர்வு, நேர்காணல் மற்றும் அரசு ஒதுக்கீடு அடிப்படையில் நிரந்தர பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும், என பல்கலைப் பதிவாளர் தெரிவித்துள்ளார். கோரிக்கை: இப்பல்கலையில் 100 கிளார்க்குகள், துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர்கள், 8 ஆண்டுகளாக தற்காலிக பணியில் உள்ளனர். தேர்வு மூலம் நிரந்தர பணியிடங்களை நிரப்ப பல்கலை நிர்வாகம் எடுத்த முடிவால் அந்தப் பணியாளர்கள், துணைவேந்தர் கல்யாணியை சந்தித்தனர். ""பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியில் உள்ள தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,'' என வலியுறுத்தினர். துணைவேந்தர் கூறுகையில், ""அரசு ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பல்கலையில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்தவர்கள் குறித்தும் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.