Sunday, January 6, 2013


அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டுமாணவர்கள் பயப்பட வேண்டாம்
மதுரை:""கணிதம், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டு, மாணவர்கள் பயப்பட வேண்டாம். ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்,'' என, மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 19வது ஆண்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசினார். 
கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: நல்ல வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் உருவாக்காத கல்வியால், எப்பயனும் இல்லை. கல்வியில் சுதந்திரமும், நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடும் இல்லாததால் தான், தரமான உயர்கல்வியைத் தரமுடிகிறது. இந்தியாவில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில், குறுகிய காலத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளோம். அதன் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளோம். நாக் கமிட்டி மூன்றாம் முறையாக ஆய்வு செய்துள்ளனர், என்றார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசியதாவது:
கல்வி ஒன்று தான், மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாமல் இருக்கும் செல்வம். அறிவியலுக்கு இரு முகங்கள் உண்டு. ஏவுகணை, தொழில்நுட்பம் மூலம் புறவசதிகளை பெருக்குவது ஒரு முகம். சிந்தனைகளை உருவாக்குவது அகநுட்ப அறிவியல், இன்னொரு முகம்.நிறைய கற்கும் போது தான் தெளிவு வரும். புதிய ஆளுமை பிறக்கும். மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்க வேண்டும். அவற்றை, பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் அனுமதிக்கிற புத்தகங்களை படிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டியதில்லை. படிப்பதை ஈடுபாட்டுடன் செய்தால், அறிவியலும், தொழில்நுட்பமும் கையில் வரும், என்றார்.நிர்வாக செயல் அதிகாரி ராம்குமார் முன்னிலை வகித்தார். மேரிடைம் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ் துறைத் தலைவிசுப்பலட்சுமி, கல்லூரி முதல்வர் சண்முகம், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குனர் (பொறுப்பு) ஸ்ரீராம் பங்கேற்றனர்.


காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த, நர்சை அரிவாளால் வெட்டி கொலை செய்த, மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை, காளையார்கோவில் அருகே களைப்பிளான் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பு. இவர் மகள் கொங்கேஸ்வரி, 26. காளையார்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக இருந்தார். அதே ஊரை சேர்ந்த எல்.ஐ.சி., ஏஜன்ட் ராஜா,38. இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி, பணி முடித்து வரும் நர்சை, ராஜா தனது டூவீலரில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். இவர்களது தொடர்பை அறிந்த, ராஜாவின் மனைவி பாக்கியம், 34, கண்டித்துள்ளார். அதற்கு பின்னரும், தொடர்பு நீட்டித்து வந்துள்ளது. இதில், ஆத்திரமுற்ற, பாக்கியம், நர்சை கொலை செய்யும் நோக்கில், கடந்த 3 நாட்களாக, வீட்டிற்கு இரவில் வரும் அவரை நோட்டமிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8.45 மணிக்கு வழக்கம் போல், நர்சு கொங்கேஸ்வரியை, ராஜா தனது டூவீலரில் அழைத்து வந்து, வீட்டிற்கு அருகே சிரமம் விலக்கு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றார். இதை, ராஜாவின் மனைவி பார்த்துவிட்டார். கொலை: இதில், ஆத்திரமுற்ற பாக்கியம், அரிவாளால், வீட்டிற்கு முன் வந்த நர்சின் கழுத்தில் வெட்டினார். 

இதில், பலத்த காயத்துடன் இருந்தவரை, நர்சின் தந்தை கருப்பு, காளையார்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சதீஸ், எஸ்.ஐ., ராதாகிருஷ்ணன் ஆகியோர், ராஜாவின் மனைவி பாக்கியத்தை கைது செய்தனர். வாக்குமூலம் : எனது கணவர், தொடர்ந்து 2 ஆண்டுகளாக நர்சுடன் பழகி வந்தார். இருவரையும் பலமுறை கண்டித்தேன். கேட்கமறுத்து தொடர்ந்து பழகியதால்,நர்சை கொலை செய்ய திட்டமிட்டேன். மூன்று நாட்களாக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு தனியாக வீட்டிற்கு வரும்போது, அரிவாளால் வெட்டி கொலை செய்தேன், என, பாக்கியம் போலீசார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.