Wednesday, January 30, 2013


கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமையுமா தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, தென்னை விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 8 ஆயிரத்து 500 ஏக்கரில் தென்னை பயிரிடப்படுகிறது. பெரும்பாலனோர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் விளைவிக்கும் தேங்காய்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் உரிய விலை கொடுப்பதில்லை.இப்பகுதியில், அரசு சார்பில் தேங்காய் கொள்முதல் அமைக்க வேண்டும் என விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆறுமுகம்: 10 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். அவசரத் தேவைகளுக்கு வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கி விடுவதால், அவர்களது குடவுனிற்கே தேங்காய்களை கொண்டுவரச் சொல்கின்றனர். ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ரூ.10 கூலியாகிறது. வண்டி வாடகை, ஏற்று, இறக்குக் கூலிகள் போக, பெரிதாக லாபம் கிடைப்பதில்லை. அதிலும், வியாபாரிகள் சொல்லும் விலைக்குதான் விற்க வேண்டியுள்ளது.முத்து: ஆயிரம் தேங்காய்கள் வாங்கும் வியாபாரிகளுக்கு 150 காய்களை இலவசமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. எங்களிடம் ஒரு காய் ரூ.3க்கு வாங்கி, சந்தையில் ரூ.10க்கு விற்கின்றனர். சிறிய காய்களை கழிவுக் காய்கள் என ஒதுக்கும் வியாபாரிகள், அவற்றை 50 காசு என விலை நிர்ணயித்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்களது உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில்லை. இப்பகுதியில் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து, உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

Photo Gallery

விஸ்வரூபத்திற்கு தடை: சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
புதுடில்லி: கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனிஷ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது. இத்தகைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர இதுவே சரியான தருணம். அவ்வாறு திருத்தம் செய்யப்படும் போது, ஒரு முறை சென்சார் போர்டு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை மாநில அரசு கேள்வி கேட்க முடியாது. இது மிகவும் அவசியமான திருத்தம் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சென்சார் போர்டுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான். சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி ஒன்று உருவாக்கும் எண்ணம் உள்ளது. மேலும், ஒரு மேல்முறையீட்டு அமைப்பை உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய படங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மனிஷ் திவாரியின் இந்த கருத்துக்கு, சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு அமைப்பு உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், மிக நீண்ட நாட்களுக்குப்பின் தான் இது போன்ற சந்தோஷமான செய்தியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.