Friday, December 21, 2012


அதிகாரியின் செக்ஸ்தொல்லையால், பெண் ஊழியர் விஷம் குடித்தார் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் பரபரப்பு

சென்னை,
சென்னை ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் அதிகாரி கொடுத்த செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் பெண் ஊழியர் விஷம் குடித்தார். தொல்லை கொடுத்த அதிகாரியை மற்ற ஊழியர்கள் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஷம் குடித்தார்
சென்னை ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்ப்பவர் அலமேலு (வயது 40). இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். அதே ஆஸ்பத்திரியில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் நாகராஜ் (40). இவருக்கும் திருமணமாகி குடும்பம் உள்ளது.
நேற்று காலையில் அலமேலு வழக்கம்போல பணிக்கு வந்தார். திடீரென அவர் ஆஸ்பத்திரியிலேயே எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
செக்ஸ் தொல்லை
அலமேலு ஹெல்த் இன்ஸ்பெக்டர் நாகராஜின் கட்டுப்பாட்டில் வேலை பார்த்தார். அலமேலுவுக்கு, நாகராஜ் செக்ஸ் தொல்லை கொடுத்தாராம். அவரது இச்சைக்கு இணங்க மறுத்ததால், அலமேலுவுக்கு அதிக வேலைப்பளு கொடுத்ததோடு, மேலும் பல வழிகளிலும் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலையை விட்டே துரத்தும் நடவடிக்கைகளில் நாகராஜ் செயல்பட்டாராம்.
நாகராஜின் தொல்லை தாங்க முடியாமல், அலமேலு எலி மருந்தை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால், மற்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள் கொதித்து எழுந்தனர்.
அடி&உதை
நாகராஜிடம் போய் நியாயம் கேட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஊழியர்கள் நாகராஜை அடித்து உதைத்தனர். அவர் அடி தாங்காமல் ஓடினார். ஆனால் ஊழியர்கள் விடாமல் அவரை விரட்டி, விரட்டி தாக்கினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்றனர்.
போலீஸ் படையை பார்த்ததும், ஊழியர்கள் கலைந்து சென்றனர். நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அலமேலு தரப்பில் ஐ.சி.எப். போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாகராஜும், அலமேலு மீது புகார் கொடுத்துள்ளார். ஊழியர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறி அவரும், அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
கைதாவாரா?
இந்த சம்பவம் தொடர்பாக துணை கமிஷனர் பவானீஸ்வரி உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில், ஐ.சி.எப். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகராஜ் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது

பெரிய ஆஸ்பத்திரியில் ஆபரேஷனுக்கு ரத்தம் பெற்றுத்தர ரூ.4 ஆயிரம் கேட்ட பணியாளர் பெண் நோயாளி குமுறல்

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வாரத்திற்கு குறைந்தது 10 பேருக்காவது இருதய ஆபரேஷன் செய்யப்படுகிறது. இந்த நிலையில் செல்லத்தாய் என்ற பெண் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் நேற்று அவருக்கு இருதய ஆபரேஷன் நடக்க இருந்தது.
இந்த நிலையில் செல்லத்தாயிடம் வந்த ஆஸ்பத்திரி பணியாளர் ஒருவர், ‘‘உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் 6 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இந்த ரத்தம் பெறுவதற்கு ரூ.4 ஆயிரம் செலவாகும். இந்த பணத்தை கொடுத்தால் தான் ரத்தம் பெற முடியும்’’ என்றார். அதற்கு செல்லத்தாய், ‘அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. நான் மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவள்‘ என்றார். ஆனால் அந்த பணியாளர், ‘பணம் கொடுத்தால் தான் ரத்தம் கிடைக்கும்‘ என்று கண்டிப்பாக கூறிவிட்டார். எனவே, செல்லத்தாய், அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டு வெளியேறி விட்டார்.
அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி ஏழை மக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டதாகும். இதில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பணம் கேட்டு ஊழியர்கள் நோயாளிகளை தொந்தரவு செய்வதால், சிகிச்சைக்கு வருபவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பெரிய ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சைக்கான முறையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்தால் ஏழை–எளிய மக்கள் மிகுந்த பயன்பெறுவர்.

"முன்பனிச்சாரல்' பொருட்காட்சி மதுரையில் இன்றுமுதல் துவக்கம்
மதுரை:மதுரையில் நாடார் மகாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை சார்பில் தமுக்கம் மைதானத்தில், "முன்பனிச்சாரல்' என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்காட்சி மற்றும் கல்வி கண்காட்சி டிச.,21 முதல் ஜன.,2ம் தேதி வரை நடக்கிறது.
"முன்பனிச்சாரல்' நிர்வாகிகள் மகேந்திரவேல், சிவசுப்பிரமணியன், வஞ்சிக்கோ ஆகியோர் கூறியதாவது: மதுரையில் முதன்முறையாக, "ஆப்பிரிக்கன் அக்ரோப்டிக்' நடன நிகழ்ச்சி, தினமும் மாலை நடக்கும். 
"இஸ்ரோ' ராக்கெட் கண்காட்சி, காய்கறி 
சிற்பங்கள், புத்தகங்கள், கருத்தரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு கூடங்கள், 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு 
கட்டணம் ரூ.30. அடையாள அட்டையுடன் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10 
கட்டணம். 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவசம். இன்று (டிச.,21) கல்வி கண்காட்சி துவங்குகிறது. இதில், கருத்தரங்குகள், பேராசிரியர்கள், வல்லுனர்கள் பேசவுள்ளனர். நாளை (டிச.,22) வீட்டு உபயோக கண்காட்சி துவங்குகிறது. 
வனத்துறை அமைச்சர் பச்சைமால் 
திறந்து வைக்கிறார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் நாகேந்திர மூர்த்தி பங்கேற்கவுள்ளனர், என்றனர்.



மேலூர் அரசு கோழிப்பண்ணையை திறக்க ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு
மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் அரசு முதல் கோழிப்பண்ணையை மீண்டும் திறக்க கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதனால், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேலூர் - திருவாதவூர் ரோட்டில் கோழிப்பண்ணை அமைக்க, அப்போதைய அமைச்சர் கக்கன் முயற்சி எடுத்தார். இதன் பயனாக 1964 மார்ச் 15ல் நவீன கோழிப்பண்ணை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அதை திறந்தார். இங்கு, 25 ஆயிரம் கோழிக்குஞ்சுகளும், 50 ஆயிரம் இறைச்சி கோழிகளும் வளர்க்கப்பட்டன.
பறவைக்காய்ச்சல்: கோழிப்பண்ணை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. 1979ல் பறவைக்காய்ச்சல் பரவியது. ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாக்க தவறினர். இதனால், நோய் தாக்கிய கோழிகளை புதைத்தனர். பறவைக்காய்ச்சல் சீசன் முடிந்த பின் மீண்டும் கோழிக்குஞ்சுகளை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், கோழிப்பண்ணை நலிவடைந்து மூடப்பட்டது.
மீண்டும் திறப்பு: கோழிப்பண்ணை கட்டடம் தற்போதும் நன்றாக உள்ளது. எனவே, இதனை புதுப்பித்து மீண்டும் கோழிப்பண்ணையை நிறுவ கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2013 மார்சில் இப்பண்ணை முழு அளவில் இயங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு நிர்ணயித்த நியாயமான விலையில், சரியான எடையில் நுகர்வோருக்கு கோழி இறைச்சி கிடைக்கும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி ஐகோர்ட்டில் மனு
மதுரை:பொங்கலையொட்டி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாடிவாசலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கை, ஐகோர்ட் ஒத்திவைத்தது.
மதுரை குலமங்கலம் மணிகண்டன் தாக்கல் செய்த மனு:
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் தொழில் செய்கிறேன். காளைகளை பயிற்றுவிக்க, கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்தில் மட்டும், அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
காளைகள் விடப்படும் வாடிவாசலுக்கு பின்பகுதியில்தான், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அலங்காநல்லூரில் ஜன., 16 ல் ஜல்லிக்கட்டு நடந்தது. ஒருநாள் முன்புதான், அதிகாரிகள் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்தனர். பலமணிநேரம், காத்திருக்க வேண்டியுள்ளது. 
குறைந்த போலீசார்தான், காளைகளை வரிசையில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். காளைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுகின்றன. வாடிவாசலில், காளைகளை வரிசையில் நிறுத்த, பரிசோதிக்க, பாதுகாக்க முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடு, காளைகளுக்கு வசதிகள் குறித்து வக்கீல் கமிஷனரை நியமித்து, ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பி.நடராஜன் ஆஜரானார். விலங்குகள் நலவாரியத்தை ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.,3 க்கு ஒத்திவைத்தனர். 
அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவி கீதா தாக்கல் செய்த பொதுநல மனு:
அலங்காநல்லூரில் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு நடக்கிறது. இது சங்க காலத்திலிருந்து தொடர்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டப்படி நடத்துகிறோம். மூன்று ஆண்டுகளாக யாரும் இறக்கவில்லை.
ஜல்லிக்கட்டு அனுமதிகோரி, கலெக்டரிடம் மனு அளித்தோம். ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றுவந்தால், அனுமதியளிப்பதாக கலெக்டர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.