Sunday, January 20, 2013


கருணாநிதியும் கரித்துண்டும்!வி.ராஜகோபால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும்;இல்லையேல், எங்கள் செய்திகளை, சுவர்களில், கரித்துண்டு வைத்து எழுதுவோம் என்று, அன்பழகன் பிறந்த நாள் கூட்டத்தில் பேசி இருக்கிறார், கருணாநிதி,செய்தி வெளியிடவில்லை என்பதற்காக, நாங்கள் கதற மாட்டோம்; வெளியிடா விட்டால் கவலை இல்லை. பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைத்தால், அவர்களுக்கு தோல்வி தான் என்றும் அறிவித்திருக்கிறார்.
வாசகர்கள் பார்வையின்படி, பத்திரிகைகளில், குறிப்பாக, தினமலர் நாளிதழில், தி.மு.க., பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன. பிறகு, கருணாநிதி எதைப் பற்றி குறிப்பிடுகிறார்? கையில் கரித்துண்டை ஏன் எடுக்கிறார்?
சில பத்திரிகைகள், அவரை இருட்டடிப்பு செய்வதாகவே வைத்துக் கொள்வோம். அவருடைய முரசொலியில், தி.மு.க., செய்திகள் வருவதில்லையா அல்லது தன் கட்சிக்காரர்களே, அதைப் படிப்பது இல்லை என, எண்ணுகிறாரா? பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு, தோல்வியே ஏற்படும் என, யாரை மனதில் வைத்து சொன்னார்? பூணூல் அணிந்த ராஜாஜியின், சுதந்திரா கட்சியுடன், 1967ல் தேர்தல் கூட்டணி வைத்து, வென்று, தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததை அவர் மறந்து விட்டாரா? இவர் புரிந்த ஊழல்களின் பட்டியலை, கவர்னரிடம், மனுவாகக் கொடுத்து, அவரது ஆட்சி வீழ்ச்சியடையக் காரணமாக இருந்த, காம்ரேட் கல்யாணசுந்தரமும், எம்.ஜி.ஆரும் பூணூல் போட்டவர்களா?
ஜாதி அடிப்படையில், பூணூல் போட்டவர்கள் எல்லாம் எதிரிகள் என்று அவர் சொன்னால், அது முற்றிலும் தவறு. பிராமணர்கள் மட்டும் அல்ல; வைசியர், சத்திரியர் போன்றவர்களுக்கும் பூணூல் அணியும் பழக்கம் உண்டு.அன்னியப் படையெடுப்பாளரிடம் தோற்று, கொடுமைகளுக்கு ஆளான சத்திரியர், போர்த் தொழிலையும், தங்கள் அடையாளமான பூணூலையும் துறந்து, விவசாயம் போன்ற, வேறு தொழில்களுக்கு போய் விட்டனர் என்பது வரலாறு. வன்னியர்குல சத்திரியர், சத்திரிய நாடார் என்று, இப்போதும், சில சமுதாயத்தவரின் பெயர் இருப்பதை காணலாம். கருணீகர்கள், விஸ்வகர்மாக்களான பொற்கொல்லர், தச்சு மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களும் பூணூல் போடுபவர்களே.
ஆகவே, கருணாநிதி, ஒட்டு மொத்தமாக பூணூல் போடுபவர்கள் எல்லாம், தன்னை சேர்ந்தவர்களுக்கு பகையாளிகள் என்று கருதிக் கொண்டிருப்பது, பெரும்பிழை.
தி.மு.க.,வினரின் சரிவுக்கு காரணம், அவர்கள் புரிந்த, வரலாறு காணாத ஊழல்களே என்பதை மறைத்து, மக்களையும், ஏன், தன் கட்சிக்காரர்களையும் திசை திருப்ப நினைக்கும் கருணாநிதியின் தந்திரம், கண்டிப்பாக தோல்வியை தழுவும்.
அன்றும்இப்படித் தான்வந்தனர்!கார்த்திகா நந்தகுமார், அருவங்காடு, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்த பிறகும், மீண்டும், அடிமையாக துடிக்கிறது, நம் இந்தியா.அன்று, வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பியர்கள், சூழ்ச்சி செய்து, நம்மை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்தனர். சிதறுண்டு கிடந்த சிற்றரசுகளுக்கு, கடன் கொடுத்து, அதை திருப்பிச் செலுத்த முடியாத, அரசுகளிடமிருந்து, வரிவசூல் செய்யும் உரிமையை பறித்து, காலப்போக்கில், நம்மை அடிமைப்படுத்தினர்.
இன்றும், அதே சூழ்ச்சி தான். ஆனால், நேரடி அன்னிய முதலீடு என்று, வேறு பெயர் தாங்கி வந்திருக்கிறது. 
இது தொடர்பாக, இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை, நிறைவேற்றத் தவறினால், உலக வங்கியில், இந்தியா, கடன் பெறும் தகுதியை இழக்க நேரிடுமாம்.
அதாவது, இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த, கடன் பெற வேண்டுமானால், வியாபாரம் செய்யும் உரிமையை, அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம்புங்கள் இந்தியரே... இப்போது, அவர்கள் வியாபாரம் செய்ய மட்டும் தான் அனுமதி கேட்கின்றனர். இதில், நாடுபிடிக்கும் திட்டமோ, நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் எண்ணமோ, அவர்களுக்கு சிறிதும் கிடையாது.
இதற்கு, காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும், அரசியல் நிபுணர்களும், பொருளாதார மேதைகளும், அவர்களை பின்னிருந்து இயக்குகிற, இந்திய திருமகள் சோனியாவும் சாட்சி.
இந்தியாவை, வெளிநாடுகளுக்கு அடகு வைக்க, இத்தனை பிரயத்தனப்படுகிற காங்கிரஸ் அரசு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்பு பணத்தை மீட்டெடுக்க மெத்தனம் காட்டுவது ஏன்? வரி ஏய்ப்பு செய்து வரும் மிகப்பெரிய நிறுவனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?முட்டாள்கள் வாழும் நாட்டில், கோமாளிகளின் ஆட்சி.என்ன செய்வது?
ராயல்சல்யூட்அடிப்போம்!செ.மாரியப்பன், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: கடந்த மாதம், மானாமதுரை என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் பிரபு, பாரதி ஆகியோரின் பெற்றோர், தங்கள் மகன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.கோஷ்டி தகராறை தடுக்கச் சென்று கண் டித்த, தன் கடமையே கண்ணாக செயல்பட்ட இளம் ஆய்வாளர் ஆல்வின் சுதன், ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டாரே, இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?தனக்கு வேலை கிடைத்ததும், அம்மா, அப்பா, தங்கை, தம்பி, நீங்கள்இனி, கூலி வேலைக்கு செல்ல வேண்டாம்; அனைவருக்கும், நான் சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாரே... 
அவரது குடும்பத்தின்இன்றைய கதி?இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?நான்காயிரம் பேர் நிம்மதியை,நான்கு பேர் கெடுக்கின்றனர் என்றால், அந்த கிருமியை அழிப்பதில் தவறில்லை என்கிறார், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி., வெள்ளத்துரை!அந்த ரவுடிகளை, அவ்வளவு நாட்கள் விட்டு வைத்ததே தவறு. அந்த விஷ கிருமிகளை, அங்கேயே சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும், காவல்துறை. கையில் துப்பாக்கி இல்லாத காரணத்தால், அந்த ரவுடிகள், அப்போது உயிர் தப்பினர். 
இதற்கு நீதி விசாரணை, சி.பி.ஐ., விசாரணை என்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.அழிக்க வேண்டிய கிருமிகளை, என்கவுன்டரில் அழித்து விட்டனர் காவல் துறையினர்.இனி, மக்கள் நிம்மதியாக இருப்பர். எனவே, தமிழக மக்கள் சார்பாக, மானாமதுரை காவல்துறைக்கு, ஒரு ராயல் சல்யூட் போட்டு, வாழ்த்து சொல்லுவோம்.

50வது நாளை கொண்டாடியது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

சினிமாவில் வெற்றி விழா கொண்டாடி ஷீல்டு கொடுப்பதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. காரணம் எந்தப் படமும் 100 நாள் வரை ஓடுவதில்லை. சில படங்களை வேண்டுமென்றே 100 நாள் ஓட்டுவார்கள். இதனால் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் வெளியூர்களில் தியேட்டரில் காணோம். என்றாலும் சென்னையில் திரையிட்ட தியேட்டர்கள் அனைத்திலும் 50 நாட்கள் ஓடிவிட்டது. இதையே ஒரு விழா எடுத்து கொண்டாடிவிட்டார்கள்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் அனைவருக்கும் ஷீல்டு கொடுத்தார். பார்த்திபன், சிவஸ்ரீ சீனிவாசன், யுடிவி தனஞ்செயன், கேயார், யூகி சேது, விமல், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோ விஜய்சேதுபதி என்னாச்சு... என்ற புகழ்பெற்ற வசனத்தை பேசினர். ஹீரோயின் காயத்திரி படத்தில் வந்தது போல் இல்லாமல் நல்ல மேக்அப்புடன் அழகாக வந்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் நடிகைகளுக்கு ஷீல்டு கொடுக்கும் படம் போட்டோகிராபர்களுக்கு கிடைத்தது.

சைக்கோ ஹீரோயின் படம்

ஹீரோக்கள்தான் சைக்கோவாக நடிக்க வேண்டுமா, ஏன் ஹீரோயின்கள் சைக்கோவாக இருக்க கூடாதா என்று இயக்குனர் இதயன் ரூம் போட்டு யோசித்து எழுதிய கதை சுடச்சுட என்ற படமாக வரப்போகிறது. சோபினா வாசுதேவ் என்ற புதுமுகம்தான் அந்த சைக்கோ ஹீரோயின். பள்ளியில் படிக்கும் அவர் தன் சைக்கோ குணங்களை மறைத்து வாழ்கிறார். அவர் தோழி ஸ்ரீஇராவுக்கு ஒரு அநியாயம் நேர்ந்து விடுகிறது. அந்த அநியாயத்தை செய்தவர்களை தேடிப்பிடித்து வெறியோடு பழிவாங்குவார் சோபினா. ஹீரோ நளன். அவரது வேலை ஹீரோயினை காதலித்து அவளது தோழியை சீரழிப்பதுதான். அதாவது நளன் ஆண்டி ஹீரோவாம். இதுதான் சுடச்சுட படத்தின் கதை. காலை 6 மணி தொடங்கி மாலை 6 வரை 12 மணி நேரத்தில் நடக்கும் கதை. சென்னையை சுற்றி சுற்றி படம் எடுத்து முடித்து விட்டார்கள். பிப்ரவரியில் ரிலீஸ் செய்கிறார்கள்.

சொந்த ஊரில் சூப்பர் வெற்றி * தோனி தலைமையில் சாதித்தது இந்தியா * மீண்டும் வீழ்ந்தது இங்கிலாந்து

ராஞ்சி:தோனியின் சொந்த ஊரில் இந்திய அணி நேற்று சூப்பர் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பவுலர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. அடுத்து கொச்சியில் இந்திய அணி வெல்ல, தொடர் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி நேற்று ராஞ்சியில் நடந்தது.சொந்த மண்ணில் முதன் முதலாக களமிறங்கிய கேப்டன் தோனி, டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் சேர்க்கப்பட்டார்.நிதான துவக்கம்:இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக், இயான் பெல் ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. ஷமி அகமது, புவனேஷ்வர் குமார் பந்துகளில் பவுண்டரி அடித்த குக், 17 ரன்களில் அவுட்டானார்.பின் வந்த பீட்டர்சன் சற்று வேகம் காட்டினார். புவனேஷ்வர் ஓவரில் பெல்லும், இஷாந்த் ஓவரில் பீட்டர்சனும் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் பீட்டர்சன் (17), அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேற, போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பத் துவங்கியது.சபாஷ் ஜடேஜா:பெல் 25 ரன்னுக்கு புவனேஷ்வர் வேகத்தில் அவுட்டானார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்கனை (10) அஷ்வின் திருப்பி அனுப்பினார். தனது இரண்டாவது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா, 2வது பந்தில் கீஸ்வெட்டர், கடைசி பந்தில் சமித் படேல் என, இருவரையும் டக் அவுட்டாக்க, மைதானம் உற்சாக வெள்ளத்தில் மிதந்தது.சுருண்டது இங்கி.,:98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய இங்கிலாந்து அணியை, ரூட், பிரஸ்னன் இணைந்து மீட்க முயற்சித்தனர். பிரஸ்னன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். இஷாந்த் பந்தில் பவுண்டரி அடித்த ரூட் (39), அடுத்த பந்திலேயே அவுட்டானார்.தொடர்ந்து பிரஸ்னன் (25), அஷ்வின் சுழலில் போல்டானார். ஸ்டீவன் (3) வந்தவேகத்தில் நடையை கட்டினார். கடைசியில் டெர்ன்பாக், டக் அவுட்டாக, இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 155 ரன்களுக்கு சுருண்டது.இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா 3, அஷ்வின், இஷாந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.ரகானே டக்:போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு, மீண்டும் மோசமான துவக்கம் கிடைத்தது. ரகானே டக் அவுட்டானார். பின் வந்த விராத் கோஹ்லி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.டெர்ன்பாக் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய இவர், ஸ்டீவன் ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்தார். வழக்கம் போல பந்துகளை வீணடித்த காம்பிர் 33 ரன்களில் (53 பந்து) திரும்பினார்.கோஹ்லி அரைசதம்:அடுத்து கோஹ்லி, யுவராஜ் சிங் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். டிரட்வெல் பந்துகளில் இரு சிக்சர் விளாசினார் கோஹ்லி. இவர், சர்வதேச ஒருநாள் அரங்கில் 22 வது, இங்கிலாந்துக்கு எதிராக 3வது அரைசதம் கடந்தார்.மறுமுனையில் யுவராஜ் சிங் பவுண்டரி மழை பொழிந்தார். பிரஸ்னன், டிரட்வெல் பந்துகளில் பவுண்டரி அடித்த இவர், டெர்ன்பாக் பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்தார். 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங், டிரட்வெல் சுழலில் சிக்கினார்.அசத்தல் வெற்றி:சொந்தமண்ணில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்ய வந்த தோனி, பவுண்டரி அடித்து ரன்கணக்கைத் துவக்கினார். தொடர்ந்து ஸ்டீவன் பந்தில் மற்றொரு பவுண்டரி விளாச, இந்திய அணி 28.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.ஆட்டநாயகன் விருது வென்ற விராத் கோஹ்லி (77), தோனி (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி மொகாலியில் வரும் 23ம் தேதி நடக்கிறது.தொடர்கிறது அம்பயர் சொதப்பல்கொச்சி போட்டியில் அம்பயர்களின் செயல்பாடு மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. நேற்று மீண்டும் இது தொடர்ந்து. இஷாந்த் சர்மா வீசிய பந்து பீட்டர்சன் கால் பேடில் பட்டு சென்றது. இதைப் பிடித்த தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய, அம்பயர் ரவி (இந்தியா) உடனடியாக அவுட் கொடுத்து, பீட்டர்சனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.அதிவேக 4000 ரன்கள்இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதி வேகமாக 4000 ரன்களை கடந்த முதல் வீரர், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார் விராத் கோஹ்லி (4028). நேற்று 93 வது இன்னிங்சில் (96வது போட்டி) விளையாடிய இவர், 49 ரன்கள் எடுத்த போது, இந்த இலக்கை எட்டினார். இந்திய அளவில் கங்குலி, 105 இன்னிங்சில் (110 போட்டி) 4000 ரன்களை கடந்துள்ளார்.* சர்வதேச அளவில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (88 இன்னிங்ஸ்) உள்ளார். இதே அணியின் கிரீனிட்ஜ் (96வது இன்னிங்ஸ்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.அணியில் மாற்றம் இல்லைஇங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான மொகாலி (ஜன., 23), தரம்சாலா (ஜன., 27) போட்டிகளில், முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய அணியே பங்கேற்கும். எவ்வித மாற்றமும் இல்லை, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பவுலர்களுக்கு பாராட்டு:வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறுகையில், அணியின் சேசிங்கை பார்த்த போது, எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வராது என்று நினைத்தேன். கடைசியில் யுவராஜ் சிங் அவுட்டானதும், சொந்த மண்ணில் பேட்டிங் செய்ய களமிறங்கினேன். புவனேஷ்வர் குமார், ஷமி அகமது ஆகியோர் புதியவர்கள். இங்கு சிறப்பாக செயல்பட்டனர். இப்போட்டியின் மூலம் அவர்களுக்கு அதிக நம்பிக்கை கிடைத்திருக்கும், என்றார்

தந்தத்தில் பிளாஸ்டிக் குழாயுடன் சுற்றி திரியும் காட்டு யானை

தந்தத்தில் பிளாஸ்டிக் குழாயுடன் சுற்றி திரியும் காட்டு யானைமூணாறு:மூணாறில், தந்தத்தில் சிக்கிய, பிளாஸ்டிக் குழாயுடன், காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. மூணாறு பகுதியில், ஒரு குட்டியுடன், நான்கு காட்டு யானைகள்சுற்றி வருகின்றன. தற்போது, இந்த காட்டு யானைகள், மாட்டுப்பட்டி அணையின், கரையோரத்தில் முகாமிட்டுள்ளன.இந்த கூட்டத்தைச் சேர்ந்த, ஆண் யானை ஒன்றின், வலது பக்க தந்தத்தில், உறை அணிந்தது போன்று, கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் குழாய் சிக்கியுள்ளது. இதை வெளியே எடுக்க இயலாத நிலையில், யானை வலம் வருகிறது. இதனால், எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், குழாய் எவ்வாறு தந்தத்தில் சிக்கியது என்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மூணாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பிளாஸ்டிக் குழாய்கள் மூலம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.இது,யானையின் தந்தத்தில், எதிர்பாராத விதத்தில் சிக்கியிருக்கலாம் என, கருதப்படுகிறது.

பெண் தற்கொலை: இருவர் கைது

பெருங்குடி;பெருங்குடி சமத்துவபுரம் அருகே தனியார் தோட்டத்தில், மகேந்திரன் என்பவர் குடும்பத்துடன் தங்கி, காவலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மகள் ரஞ்சிதா, 19. இவரும், வலையங்குளம் மச்சக்காளை மகன் வடிவேலுவும், 21, காதலித்தனர். சில நாட்களுக்கு முன்பு வடிவேல், மச்சகாளை ஆகியோர் ரஞ்சிதா வீட்டிற்கு சென்று, அவதூறாக பேசினர். அன்று இரவு 8 மணிக்கு வெளியில் சென்ற ரஞ்சிதா வீடு திரும்பவில்லை. நேற்று காலை, மகேந்திரன் வேலை பார்க்கும் தோட்டத்திலுள்ள கிணற்றில் ரஞ்சிதா இறந்து கிடந்தார். இதுகுறித்து மகேந்திரன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். வடிவேல், மச்சக்காளையை @பாலீசார் கைது செய்தனர்.

மதுரையில் வழக்குப்பதிவு காணாத "சைபர் கிரைம்':மொபைல் போன் பயன்பாடு எதிரொலி

மதுரை:மொபைல் போன் பயன்பாடு எதிரொலியாக, மதுரை சைபர் கிரைம் பிரிவில் புகார்கள் ஏதும் வராததால், 2012ல் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.மதுரையில் கம்ப்யூட்டர், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடி உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் சைபர் கிரைம் பிரிவு செயல்படுகிறது. இதுதொடர்பான குற்றங்களை தடுக்க, பிரவுசிங் சென்டர்கள் நடத்தும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கமிஷனர் சஞ்சய்மாத்தூர் பேசுகையில், பிரவுசிங் சென்டர் நடத்துவோர், அதற்கான அனுமதியை பெற வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
அனுமதியின்றி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும். சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை செய்ய அனுமதிப்பதால், உரிமையாளர் தான் பெரிதும் பாதிக்கப்படுவார். இதை உணர்ந்து குற்றங்கள் நடக்க அனுமதிக்கக்கூடாது, என்றார்.பிரவுசிங் சென்டர்களில் ஆபாச படம் பார்ப்பது, ஆபாச படங்களில் சினிமா நடிகைகளின் படத்தை இணைத்து வெளியிடுவது போன்ற குற்றங்கள் நடந்தன.
தற்போது மொபைல் போனிலேயே அனைத்தையும் பார்த்து விடுகின்றனர். பேஸ் புக்கில் பெயர்களை போலியாக பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் புதிதாக முளைத்துள்ளன. மதுரை சைபர் கிரைம் பிரிவில் 2012ல் புகார்கள் ஏதும் வராததால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மதுரையில் அனுமதி பெற்ற 120 பிரவுசிங் சென்டர்கள் செயல்படுகின்றன.