கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமையுமா தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, தென்னை விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 8 ஆயிரத்து 500 ஏக்கரில் தென்னை பயிரிடப்படுகிறது. பெரும்பாலனோர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் விளைவிக்கும் தேங்காய்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் உரிய விலை கொடுப்பதில்லை.இப்பகுதியில், அரசு சார்பில் தேங்காய் கொள்முதல் அமைக்க வேண்டும் என விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆறுமுகம்: 10 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். அவசரத் தேவைகளுக்கு வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கி விடுவதால், அவர்களது குடவுனிற்கே தேங்காய்களை கொண்டுவரச் சொல்கின்றனர். ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ரூ.10 கூலியாகிறது. வண்டி வாடகை, ஏற்று, இறக்குக் கூலிகள் போக, பெரிதாக லாபம் கிடைப்பதில்லை. அதிலும், வியாபாரிகள் சொல்லும் விலைக்குதான் விற்க வேண்டியுள்ளது.முத்து: ஆயிரம் தேங்காய்கள் வாங்கும் வியாபாரிகளுக்கு 150 காய்களை இலவசமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. எங்களிடம் ஒரு காய் ரூ.3க்கு வாங்கி, சந்தையில் ரூ.10க்கு விற்கின்றனர். சிறிய காய்களை கழிவுக் காய்கள் என ஒதுக்கும் வியாபாரிகள், அவற்றை 50 காசு என விலை நிர்ணயித்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்களது உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில்லை. இப்பகுதியில் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து, உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment