Wednesday, January 9, 2013


மாநகராட்சியில் "டெங்கு' அபாயம்: மீண்டும் அதிகாரிகள் "குறட்டை'யால் பணிமந்தம்
மதுரை:மதுரை மாநகராட்சியில், "டெங்கு' காய்ச்சல் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, கொசு ஒழிப்பு பணி, முன்பை விட மந்த கதியில் நடக்கிறது. இதனால், மீண்டும் கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.கடந்த ஜூனில், மாநகராட்சியில் கால் பதித்த "டெங்கு', ஐந்து மாதங்களுக்கு ஆட்டிப் படைத்தது. உயிர் பலி, உடல்நலக் குறைவு என, பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். உயிரிழப்பு அதிகரித்ததால், "டெங்கு' பரப்பும் "ஏடிஸ்' கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள், தீவிரப்படுத்தப்பட்டன.
விழிப்புணர்வு நாடகங்கள், கூடுதல் கொசு ஒழிப்பு இயந்திரங்கள், மருந்துகள் வாங்க, சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கூடுதல் பணியாளர்கள் மூலம், பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதனால், "டெங்கு' கட்டுப்படுத்தப்பட்டு, பாதிப்பு குறைந்தது. இதையடுத்து, கொசு ஒழிக்கும் பணி மீண்டும் மந்தமாக நடக்கிறது. ஜூனில் டெங்கு பரவிய போது, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, அதன் பின் கவனிக்க தவறியதே, ஆகஸ்ட்டில் டெங்கு தீவிரமாக காரணமானது. அதே பாணியில், தற்போது மீண்டும் கொசு ஒழிப்பு பணி, மந்தமாகியுள்ளது.
இதனால், மீண்டும் "ஏடிஸ்' கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. "வாரந்தோறும், கொசு ஒழிப்பு பணி நடக்கும் வார்டுகள் குறித்த விபரம் வெளியிடப்படும்', என, கமிஷனர் நந்தகோபால் தெரிவித்தார். முதல் வாரம் வெளியிட்டதுடன் சரி, அதன் பின், எந்த பட்டியலும் வெளியிடப்படவில்லை. எந்த வார்டில் பணி நடக்க வேண்டும் என்பதை தேர்வு செய்வதில் கூட, மண்டல அலுவலகங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதே நிலை தொடர்ந்தால், மீண்டும் கொசுக்களின் "ரீங்காரம்' கேட்கும் நாள், வெகு தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment