
கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு
கொல்கத்தா, டிச. 18-
கொல்கத்தாவில் உள்ள ரிஷி அரபிந்தோ பாலிகா வித்யாலயா பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் மாணவிகள் 29 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று மாலை தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீமதி கோஷ் மற்றும் சில ஆசிரியைகளை சிறைபிடித்தனர். அப்போது தங்களுக்குதேர்ச்சி மதிப்பெண் அளித்து, பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த மாணவிகள் தங்கள் வினாத்தாள் சரியாக திருத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். அவர்களுடன் சில மாணவிகளின் பெற்றோரும் சேர்ந்துகொண்டனர். மேல்நிலைக் கல்வி வாரியம் அனுமதியில்லாமல் பள்ளியால், அந்த மாணவிகளை தேர்ச்சி பெற வைக்க முடியாது என்று தலைமை ஆசிரியை கூறினார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இரவு முழுவதும் ஆசிரியைகள், மாணவிகளின் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மேற்கு வங்க மேல்நிலை கல்வி வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராடும் மாணவிகளின் விடைத்தாள்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன்பின்னர் யார் யாருக்கு பாஸ் மார்க் போட முடியும் என்பதை முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தனர். இதற்காக நாளை அனைவரையும் கல்வி வாரியத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் 24 மணி நேரத்திற்குப் பிறகு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டனர்.
பிளஸ்2 மாணவிகளைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு மாணவிகளும் தங்கள் விடைத்தாளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment