மழை இல்லை, அணையிலும் தண்ணீர்இல்லை: மாடுகளை மேயவிட்டு நாற்றாங்கால்கள் அழிப்பு வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
அலங்காநல்லூர்,
மழை பொய்த்து, அணைகளும் தண்ணீரின்றி வறண்டதால், நாற்றாங்கால்களை மாடுகளை மேயவிட்டு விவசாயிகள் அழித்து வருகின்றனர். வறட்சி மாவட்டமாக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொய்த்துப்போன மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். கடந்த பல ஆண்டுகளாக ஒரு மழை கைவிட்டாலும், மற்றொரு மழை கை கொடுத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு 2 மழைகளுமே பொய்த்துவிட்டன.
கடந்த மாதம் பெய்த ஓரளவு மழையினால், முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த 9–ந் தேதி பாசனத்திற்கென தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை அணை மூலம் கள்ளந்திரி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்தனர். அப்போது வைகை அணையில் 59 அடி நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு 1750 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது. இதன் மூலம் பேரணையிலிருந்து வாடிப்பட்டி வடக்கு தாலுகா, கள்ளந்திரி மற்றும் மேலூர் பகுதிவரை சுமார் 80 ஆயிரம் ஏக்கருக்கு இந்த தண்ணீர் விடப்பட்டது.
மேலும் திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் திறப்பின் மூலம் சுமார் 19 ஆயிரத்து 420 ஏக்கர் வரை பயனடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
முற்றிலும் அழிந்தன
மதுரை மாவட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரை முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை நம்பி விவசாயப் பணிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் தொடங்கினார். ஆனால் தண்ணீர் திறந்துவிடப்பட்ட பின்னர் மழை அடியோடு பொய்த்துவிட்டது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது.
இதையடுத்து கடந்த 28–ந் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டது. திறந்துவிடப்பட்ட 19 நாட்களில் அணை தண்ணீர் நிறுத்தப்பட்டதால் நாற்றாங்கால் பாவிய விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். நாற்றுகளை மாற்றி நடக்கூடிய முடியாத நிலை உருவானது. தண்ணீர் முழுமையாக வந்துவிடும், நடவுசெய்து கதிர் அறுத்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் சிலர் விலைக்கு நெல்நாற்று வாங்கி நடவு செய்தனர். பல இடங்களில் உழுது, பரம்படித்து வரப்புவெட்டி நடவுக்கு தயார்நிலையிலும் நிலங்களை வைத்திருந்தனர். இந்தச் சூழ்நிலையில் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனதால் அத்தனை நாற்றுக்களும் நடவுப் பயிர்களும் பட்டுப் போய்விட்டது.
இதுகுறித்து காஞ்சரம்பேட்டையைச் சேர்ந்த வைகை பெரியாறு பாசனக் கோட்டத்தலைவர் எம்.பி.ஆர்.மலையாண்டிஅசோக் கூறியதாவது: முல்லை பெரியாறு பாசனப் பகுதியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை நம்பி நாற்றாங்கால் தயார் செய்தோம். விரைவான அறுவடைக்காக பாத்தி நாற்றாங்கால் அமைத்து இயந்திரங்கள் மூலம் நடவு செய்ய விவசாயிகள் தயார் நிலையில் இருந்தோம். மேலும் சிலர் வெளியூர்களிலும் வெளிமாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து நெல் நாற்றுக்கள்வாங்கிவந்து நடவு செய்தனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
ஆனால் 19 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்தது. நடவுசெய்த நெற்பயிர்களும் நெல் நாற்றுகளும் கருகிவிட்டன. எனவே தமிழ்நாடு அரசு உரிய நிவாரணமும் இழப்பீட்டு தொகையும் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட நிலங்களை உரிய அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கையை மாவட்டநிர்வாகத்திடம் தாக்கல் செய்யவேண்டும். மாவட்ட ஆட்சியர் அதனை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே கருகிய நாற்றாங்கால்களை அழிப்பதற்கு செலவழிக்க கூட வழியில்லாததால், விவசாயிகள் ஆடுமாடுகளை மேயவிட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தை பொருத்தவரை இந்த ஆண்டின் ஒட்டுமொத்த விவசாயமும் கருகிவிட்டது. கடன் வாங்கி செலவழித்த விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்துப்போய் உள்ளனர்
No comments:
Post a Comment