Friday, December 21, 2012


அதிகாரியின் செக்ஸ்தொல்லையால், பெண் ஊழியர் விஷம் குடித்தார் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் பரபரப்பு

சென்னை,
சென்னை ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் அதிகாரி கொடுத்த செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் பெண் ஊழியர் விஷம் குடித்தார். தொல்லை கொடுத்த அதிகாரியை மற்ற ஊழியர்கள் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஷம் குடித்தார்
சென்னை ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்ப்பவர் அலமேலு (வயது 40). இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். அதே ஆஸ்பத்திரியில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் நாகராஜ் (40). இவருக்கும் திருமணமாகி குடும்பம் உள்ளது.
நேற்று காலையில் அலமேலு வழக்கம்போல பணிக்கு வந்தார். திடீரென அவர் ஆஸ்பத்திரியிலேயே எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
செக்ஸ் தொல்லை
அலமேலு ஹெல்த் இன்ஸ்பெக்டர் நாகராஜின் கட்டுப்பாட்டில் வேலை பார்த்தார். அலமேலுவுக்கு, நாகராஜ் செக்ஸ் தொல்லை கொடுத்தாராம். அவரது இச்சைக்கு இணங்க மறுத்ததால், அலமேலுவுக்கு அதிக வேலைப்பளு கொடுத்ததோடு, மேலும் பல வழிகளிலும் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலையை விட்டே துரத்தும் நடவடிக்கைகளில் நாகராஜ் செயல்பட்டாராம்.
நாகராஜின் தொல்லை தாங்க முடியாமல், அலமேலு எலி மருந்தை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால், மற்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள் கொதித்து எழுந்தனர்.
அடி&உதை
நாகராஜிடம் போய் நியாயம் கேட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஊழியர்கள் நாகராஜை அடித்து உதைத்தனர். அவர் அடி தாங்காமல் ஓடினார். ஆனால் ஊழியர்கள் விடாமல் அவரை விரட்டி, விரட்டி தாக்கினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்றனர்.
போலீஸ் படையை பார்த்ததும், ஊழியர்கள் கலைந்து சென்றனர். நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அலமேலு தரப்பில் ஐ.சி.எப். போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாகராஜும், அலமேலு மீது புகார் கொடுத்துள்ளார். ஊழியர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறி அவரும், அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
கைதாவாரா?
இந்த சம்பவம் தொடர்பாக துணை கமிஷனர் பவானீஸ்வரி உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில், ஐ.சி.எப். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகராஜ் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது

No comments:

Post a Comment