Thursday, December 27, 2012


பெண்ணை கொலை செய்து தற்கொலை என "செட்டப்' ஆயுள் தண்டனை உறுதி
மதுரை : கன்னியாகுமரி மூஞ்சிறையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, தூக்கில் தொங்கியது போல் "செட்டப்' செய்தவர்களுக்கு, கீழ்கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. 
திருநெல்வேலி வையகுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுலோச்சனா. இவரது மருமகள் மூஞ்சிறையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்தார். அவருக்கு துணையாக சுலோச்சனா தங்கியிருந்தார். 2009 மார்ச் 15 ல் இரவுப் பணிக்கு மருமகள் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் கழிப்பறையில் சுலோச்சனா 2 கைகள் கட்டப்பட்டு, தூக்கில் பிணமாக தொங்கினார். கால்கள் தரையை தொட்டபடி இருந்தன. அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. மொபைல்போன் மாயமாகியிருந்தது.தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். டம்ளரில் 2 பேரின் கைரேகைகள் பதிவாகியிருந்தன. அது, சுலோச்சனாவின் கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை. 
சின்னத்தம்பி (எ) "அருவா' சின்னத்தம்பி, பெரியாண்டவர் நகைக்காக கொலை செய்து, வழக்கை திசை திருப்பவே தற்கொலை நாடகம் நடத்தியது தெரிந்தது. பெரியாண்டவர் சரணடைந்தார். கொள்ளையடித்த நகைகளை, போலீசார் மீட்டனர். சின்னத்தம்பி, பெரியாண்டவர் கொலை செய்து, தடயங்களை மறைத்த குற்றத்திற்காக, தலா 10 ஆண்டு சிறை மற்றும் ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க, நாகர்கோவில் செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து பெஞ்ச் உத்தரவு: எந்த ஒரு பெண்ணும், கைகளை பின்னால் கட்டிக்கொண்டு தூக்கில் தொங்குவது சாத்தியமில்லை. தன்னைத்தானே கொலை செய்துகொள்ளவும் முடியாது. சுலோச்சனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது, பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது, என்றது. 


No comments:

Post a Comment