Friday, December 21, 2012

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி ஐகோர்ட்டில் மனு
மதுரை:பொங்கலையொட்டி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாடிவாசலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கை, ஐகோர்ட் ஒத்திவைத்தது.
மதுரை குலமங்கலம் மணிகண்டன் தாக்கல் செய்த மனு:
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் தொழில் செய்கிறேன். காளைகளை பயிற்றுவிக்க, கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்தில் மட்டும், அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
காளைகள் விடப்படும் வாடிவாசலுக்கு பின்பகுதியில்தான், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அலங்காநல்லூரில் ஜன., 16 ல் ஜல்லிக்கட்டு நடந்தது. ஒருநாள் முன்புதான், அதிகாரிகள் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்தனர். பலமணிநேரம், காத்திருக்க வேண்டியுள்ளது. 
குறைந்த போலீசார்தான், காளைகளை வரிசையில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். காளைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுகின்றன. வாடிவாசலில், காளைகளை வரிசையில் நிறுத்த, பரிசோதிக்க, பாதுகாக்க முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடு, காளைகளுக்கு வசதிகள் குறித்து வக்கீல் கமிஷனரை நியமித்து, ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் பி.நடராஜன் ஆஜரானார். விலங்குகள் நலவாரியத்தை ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.,3 க்கு ஒத்திவைத்தனர். 
அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவி கீதா தாக்கல் செய்த பொதுநல மனு:
அலங்காநல்லூரில் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு நடக்கிறது. இது சங்க காலத்திலிருந்து தொடர்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டப்படி நடத்துகிறோம். மூன்று ஆண்டுகளாக யாரும் இறக்கவில்லை.
ஜல்லிக்கட்டு அனுமதிகோரி, கலெக்டரிடம் மனு அளித்தோம். ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றுவந்தால், அனுமதியளிப்பதாக கலெக்டர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

No comments:

Post a Comment