கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு ரூ.29 லட்சம் சிறப்பு கட்டணம் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பு
மதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, அரசு வழங்க வேண்டிய சிறப்பு கட்டணம் 29 லட்சம் ரூபாய், 4 ஆண்டுகளாக வழங்கவில்லை.அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.32ம், 9-10ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ. 47ம், பிளஸ்1, பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் ரூ.102, தொழிற்கல்விக்கு ரூ.92, கலை பிரிவு மாணவர்களுக்கு ரூ.72 வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை 2008ல், அரசு ரத்து செய்தது. அதற்கு பதில் பள்ளிகளுக்கு அரசே அந்த கட்டணத்தை வழங்கி வந்தது.
இதில் இருந்து, பள்ளி பராமரிப்பு, மருத்துவ முகாம்கள், சாரணர் இயக்க செயல்பாடு, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளி கல்வித் துறைக்கு உட்பட்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் இந்த கட்டணம் வழங்கப்படுகின்றன. ஆனால், கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் 2008 முதல் வழங்கப்படவில்லை. இதனால், 2008-2010 வரை ரூ. 17 லட்சத்து 92,095 நிலுவையில் உள்ளது. இதுதவிர, 2012ம் ஆண்டு வரை இதன் நிலுவை ரூ.29 லட்சத்து 18 ஆயிரத்து 705ஆக உயர்ந்துள்ளது.
இப்பள்ளிகளின் மாநில சட்ட ஆலோசகர் சின்னபாண்டியன் கூறியதாவது:பள்ளி கல்வித் துறைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டணங்களை அரசு வழங்கி வருகிறது. ஆனால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு மட்டும் 4 ஆண்டுகளாக வழங்கவில்லை. இக்கட்டணங்களை பள்ளிக் கல்வி துறையே வழங்கலாம் என, 2010 அக்.,7ல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த கட்டணங்கள் வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில், பள்ளி கல்வி துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சிறப்பு கட்டணங்களை வழங்கும்போது, கள்ளர் பள்ளிகளுக்கும் சேர்த்து வழங்கவேண்டும், என்றார்.
No comments:
Post a Comment