Friday, January 18, 2013

அடகுக்கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி முற்றுகை
ஊமச்சிகுளம்:மதுரையில் பல கோடி ரூபாய் அடகு நகைகளுடன் மாயமான கடை உரிமையாளரை கைது செய்து, நகைகளை மீட்டுத் தரக்கோரி வாடிக்கையாளர்கள் ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
மதுரை அய்யர்பங்களா லட்சுமணன் உச்சப்பரம்பு ரோட்டில் "முத்து பைனான்ஸ்' நகை அடகுக் கடை நடத்தினார். குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதியினர் நகைகளை அடகு வைத்து பணம் 
பெற்றனர்.
பொங்கலையொட்டி நகைகளை மீட்க பலர் பணம் கட்டினர். இருநாட்களுக்குப் பின் நகைகளை தருவதாக கூறினார். குறிப்பிட்ட நாளில் நகையை பெற வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தனர். கடை பூட்டிவிட்டு லட்சுமணன் மாயமானார். அடகு வைத்தவர்கள் கடையை முற்றுகையிட்டனர். 
இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கடையில் வேலை பார்த்த மூர்த்தியை அழைத்து விசாரித்து வருகிறார். கடை உரிமையாளரை கைது செய்ய பாலகிருஷ்ணன் எஸ்.பி., 4 தனிப்படை அமைத்துள்ளார்.
லட்சுமணனை கைது செய்ய கோரி, வாடிக்கையாளர்கள் ஊமச்சிகுளம் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்தனர். லட்சுமணன் குறித்து தெரிவித்தால் கைது செய்வதாக போலீசார் கூறினர். இதனால், ஆத்திரமுற்ற வாடிக்கையாளர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டதுடன், மறியலில் ஈடுபட்டனர்.
ராஜ்குமார், காந்திபுரம்: புதூர் காந்திபுரத்தை சேர்ந்த 50பேர் 200 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளோம். சிலர் நகையை திருப்ப பணம் கட்டினர். பணத்தை பெற்ற லட்சுமணன் ஓடிவிட்டார்.
போஸ், வண்டியூர்: அடகு வைத்துள்ள 15 பவுன் நகையை திருப்ப ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினேன். திடீரென அடகு கடை உரிமையாளர் ஓடிவிட்டார். 
டி.எஸ்.பி., சீனிவாசபெருமாள்: நகை அடகு வைத்த ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். உரிமையாளர் லட்சுமணன் குடும்பத்தினர் மற்றும் வேலை பார்த்தவர்களை அழைத்து விசாரித்து வருகிறோம். அவரை கைது செய்தவுடன் நகைகளை மீட்டு ஒப்படைப்போம்.

No comments:

Post a Comment