Friday, December 21, 2012

மேலூர் அரசு கோழிப்பண்ணையை திறக்க ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு
மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் அரசு முதல் கோழிப்பண்ணையை மீண்டும் திறக்க கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதனால், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மேலூர் - திருவாதவூர் ரோட்டில் கோழிப்பண்ணை அமைக்க, அப்போதைய அமைச்சர் கக்கன் முயற்சி எடுத்தார். இதன் பயனாக 1964 மார்ச் 15ல் நவீன கோழிப்பண்ணை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அதை திறந்தார். இங்கு, 25 ஆயிரம் கோழிக்குஞ்சுகளும், 50 ஆயிரம் இறைச்சி கோழிகளும் வளர்க்கப்பட்டன.
பறவைக்காய்ச்சல்: கோழிப்பண்ணை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. 1979ல் பறவைக்காய்ச்சல் பரவியது. ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாக்க தவறினர். இதனால், நோய் தாக்கிய கோழிகளை புதைத்தனர். பறவைக்காய்ச்சல் சீசன் முடிந்த பின் மீண்டும் கோழிக்குஞ்சுகளை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், கோழிப்பண்ணை நலிவடைந்து மூடப்பட்டது.
மீண்டும் திறப்பு: கோழிப்பண்ணை கட்டடம் தற்போதும் நன்றாக உள்ளது. எனவே, இதனை புதுப்பித்து மீண்டும் கோழிப்பண்ணையை நிறுவ கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2013 மார்சில் இப்பண்ணை முழு அளவில் இயங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு நிர்ணயித்த நியாயமான விலையில், சரியான எடையில் நுகர்வோருக்கு கோழி இறைச்சி கிடைக்கும்.

1 comment: