சொந்த ஊரில் சூப்பர் வெற்றி * தோனி தலைமையில் சாதித்தது இந்தியா * மீண்டும் வீழ்ந்தது இங்கிலாந்து
ராஞ்சி:தோனியின் சொந்த ஊரில் இந்திய அணி நேற்று சூப்பர் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பவுலர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. அடுத்து கொச்சியில் இந்திய அணி வெல்ல, தொடர் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி நேற்று ராஞ்சியில் நடந்தது.சொந்த மண்ணில் முதன் முதலாக களமிறங்கிய கேப்டன் தோனி, டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் சேர்க்கப்பட்டார்.நிதான துவக்கம்:இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக், இயான் பெல் ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. ஷமி அகமது, புவனேஷ்வர் குமார் பந்துகளில் பவுண்டரி அடித்த குக், 17 ரன்களில் அவுட்டானார்.பின் வந்த பீட்டர்சன் சற்று வேகம் காட்டினார். புவனேஷ்வர் ஓவரில் பெல்லும், இஷாந்த் ஓவரில் பீட்டர்சனும் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் பீட்டர்சன் (17), அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேற, போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பத் துவங்கியது.சபாஷ் ஜடேஜா:பெல் 25 ரன்னுக்கு புவனேஷ்வர் வேகத்தில் அவுட்டானார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்கனை (10) அஷ்வின் திருப்பி அனுப்பினார். தனது இரண்டாவது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா, 2வது பந்தில் கீஸ்வெட்டர், கடைசி பந்தில் சமித் படேல் என, இருவரையும் டக் அவுட்டாக்க, மைதானம் உற்சாக வெள்ளத்தில் மிதந்தது.சுருண்டது இங்கி.,:98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய இங்கிலாந்து அணியை, ரூட், பிரஸ்னன் இணைந்து மீட்க முயற்சித்தனர். பிரஸ்னன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். இஷாந்த் பந்தில் பவுண்டரி அடித்த ரூட் (39), அடுத்த பந்திலேயே அவுட்டானார்.தொடர்ந்து பிரஸ்னன் (25), அஷ்வின் சுழலில் போல்டானார். ஸ்டீவன் (3) வந்தவேகத்தில் நடையை கட்டினார். கடைசியில் டெர்ன்பாக், டக் அவுட்டாக, இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 155 ரன்களுக்கு சுருண்டது.இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா 3, அஷ்வின், இஷாந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.ரகானே டக்:போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு, மீண்டும் மோசமான துவக்கம் கிடைத்தது. ரகானே டக் அவுட்டானார். பின் வந்த விராத் கோஹ்லி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.டெர்ன்பாக் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய இவர், ஸ்டீவன் ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்தார். வழக்கம் போல பந்துகளை வீணடித்த காம்பிர் 33 ரன்களில் (53 பந்து) திரும்பினார்.கோஹ்லி அரைசதம்:அடுத்து கோஹ்லி, யுவராஜ் சிங் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். டிரட்வெல் பந்துகளில் இரு சிக்சர் விளாசினார் கோஹ்லி. இவர், சர்வதேச ஒருநாள் அரங்கில் 22 வது, இங்கிலாந்துக்கு எதிராக 3வது அரைசதம் கடந்தார்.மறுமுனையில் யுவராஜ் சிங் பவுண்டரி மழை பொழிந்தார். பிரஸ்னன், டிரட்வெல் பந்துகளில் பவுண்டரி அடித்த இவர், டெர்ன்பாக் பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்தார். 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங், டிரட்வெல் சுழலில் சிக்கினார்.அசத்தல் வெற்றி:சொந்தமண்ணில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்ய வந்த தோனி, பவுண்டரி அடித்து ரன்கணக்கைத் துவக்கினார். தொடர்ந்து ஸ்டீவன் பந்தில் மற்றொரு பவுண்டரி விளாச, இந்திய அணி 28.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.ஆட்டநாயகன் விருது வென்ற விராத் கோஹ்லி (77), தோனி (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி மொகாலியில் வரும் 23ம் தேதி நடக்கிறது.தொடர்கிறது அம்பயர் சொதப்பல்கொச்சி போட்டியில் அம்பயர்களின் செயல்பாடு மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. நேற்று மீண்டும் இது தொடர்ந்து. இஷாந்த் சர்மா வீசிய பந்து பீட்டர்சன் கால் பேடில் பட்டு சென்றது. இதைப் பிடித்த தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய, அம்பயர் ரவி (இந்தியா) உடனடியாக அவுட் கொடுத்து, பீட்டர்சனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.அதிவேக 4000 ரன்கள்இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதி வேகமாக 4000 ரன்களை கடந்த முதல் வீரர், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார் விராத் கோஹ்லி (4028). நேற்று 93 வது இன்னிங்சில் (96வது போட்டி) விளையாடிய இவர், 49 ரன்கள் எடுத்த போது, இந்த இலக்கை எட்டினார். இந்திய அளவில் கங்குலி, 105 இன்னிங்சில் (110 போட்டி) 4000 ரன்களை கடந்துள்ளார்.* சர்வதேச அளவில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (88 இன்னிங்ஸ்) உள்ளார். இதே அணியின் கிரீனிட்ஜ் (96வது இன்னிங்ஸ்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.அணியில் மாற்றம் இல்லைஇங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான மொகாலி (ஜன., 23), தரம்சாலா (ஜன., 27) போட்டிகளில், முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய அணியே பங்கேற்கும். எவ்வித மாற்றமும் இல்லை, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பவுலர்களுக்கு பாராட்டு:வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறுகையில், அணியின் சேசிங்கை பார்த்த போது, எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வராது என்று நினைத்தேன். கடைசியில் யுவராஜ் சிங் அவுட்டானதும், சொந்த மண்ணில் பேட்டிங் செய்ய களமிறங்கினேன். புவனேஷ்வர் குமார், ஷமி அகமது ஆகியோர் புதியவர்கள். இங்கு சிறப்பாக செயல்பட்டனர். இப்போட்டியின் மூலம் அவர்களுக்கு அதிக நம்பிக்கை கிடைத்திருக்கும், என்றார்
No comments:
Post a Comment