Wednesday, January 30, 2013


கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமையுமா தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, தென்னை விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 8 ஆயிரத்து 500 ஏக்கரில் தென்னை பயிரிடப்படுகிறது. பெரும்பாலனோர் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் விளைவிக்கும் தேங்காய்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் உரிய விலை கொடுப்பதில்லை.இப்பகுதியில், அரசு சார்பில் தேங்காய் கொள்முதல் அமைக்க வேண்டும் என விவசாயிகளின் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆறுமுகம்: 10 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். அவசரத் தேவைகளுக்கு வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கி விடுவதால், அவர்களது குடவுனிற்கே தேங்காய்களை கொண்டுவரச் சொல்கின்றனர். ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ரூ.10 கூலியாகிறது. வண்டி வாடகை, ஏற்று, இறக்குக் கூலிகள் போக, பெரிதாக லாபம் கிடைப்பதில்லை. அதிலும், வியாபாரிகள் சொல்லும் விலைக்குதான் விற்க வேண்டியுள்ளது.முத்து: ஆயிரம் தேங்காய்கள் வாங்கும் வியாபாரிகளுக்கு 150 காய்களை இலவசமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. எங்களிடம் ஒரு காய் ரூ.3க்கு வாங்கி, சந்தையில் ரூ.10க்கு விற்கின்றனர். சிறிய காய்களை கழிவுக் காய்கள் என ஒதுக்கும் வியாபாரிகள், அவற்றை 50 காசு என விலை நிர்ணயித்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்களது உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில்லை. இப்பகுதியில் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து, உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

Photo Gallery

விஸ்வரூபத்திற்கு தடை: சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
புதுடில்லி: கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனிஷ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சினிமா தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது. இத்தகைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர இதுவே சரியான தருணம். அவ்வாறு திருத்தம் செய்யப்படும் போது, ஒரு முறை சென்சார் போர்டு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை மாநில அரசு கேள்வி கேட்க முடியாது. இது மிகவும் அவசியமான திருத்தம் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சென்சார் போர்டுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான். சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் ஒரு கமிட்டி ஒன்று உருவாக்கும் எண்ணம் உள்ளது. மேலும், ஒரு மேல்முறையீட்டு அமைப்பை உருவாக்கி அதில் சர்ச்சைக்குரிய படங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மனிஷ் திவாரியின் இந்த கருத்துக்கு, சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு அமைப்பு உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், மிக நீண்ட நாட்களுக்குப்பின் தான் இது போன்ற சந்தோஷமான செய்தியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Saturday, January 26, 2013

5 பவுன் நகைக்காக பெண் கொலை
அவனியாபுரம்: அவனியாபுரத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, 5 பவுன் நகையை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதி பசும்பொன் நகரை சேர்ந்தவர் சமயா, 55. காய்கறி வியாபாரம் செய்தார். கணவரை இழந்த இவருக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்றுமுன்தினம், மகன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுவிட்டு, இரவு 10 மணிக்கு சமயா வீடு திரும்பினார். நேற்று காலை வீட்டை ஒட்டியுள்ள முள்செடிகளுக்கு அருகே பிணமாக கிடந்தார். பாலகிருஷ்ணன் எஸ்.பி., டி.எஸ்.பி., புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் விசாரித்தனர்.விசாரணையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தில் இருந்த 5 பவுன் நகை திருடு போயிருந்ததும் தெரிந்தது.வீட்டினுள் இருந்த சமயாவை, கொலை செய்து வெளியில் வீசினார்களா? வீட்டிற்குள் நுழையும் போது, மறைந்திருந்த கொலையாளி, அவரை கொன்று நகையை திருடினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Sunday, January 20, 2013


கருணாநிதியும் கரித்துண்டும்!வி.ராஜகோபால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: தினமலர் நாளிதழில், தி.மு.க., குறித்த செய்திகளை வெளியிட வேண்டும்;இல்லையேல், எங்கள் செய்திகளை, சுவர்களில், கரித்துண்டு வைத்து எழுதுவோம் என்று, அன்பழகன் பிறந்த நாள் கூட்டத்தில் பேசி இருக்கிறார், கருணாநிதி,செய்தி வெளியிடவில்லை என்பதற்காக, நாங்கள் கதற மாட்டோம்; வெளியிடா விட்டால் கவலை இல்லை. பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைத்தால், அவர்களுக்கு தோல்வி தான் என்றும் அறிவித்திருக்கிறார்.
வாசகர்கள் பார்வையின்படி, பத்திரிகைகளில், குறிப்பாக, தினமலர் நாளிதழில், தி.மு.க., பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன. பிறகு, கருணாநிதி எதைப் பற்றி குறிப்பிடுகிறார்? கையில் கரித்துண்டை ஏன் எடுக்கிறார்?
சில பத்திரிகைகள், அவரை இருட்டடிப்பு செய்வதாகவே வைத்துக் கொள்வோம். அவருடைய முரசொலியில், தி.மு.க., செய்திகள் வருவதில்லையா அல்லது தன் கட்சிக்காரர்களே, அதைப் படிப்பது இல்லை என, எண்ணுகிறாரா? பூணூலையும், எழுத்தாணியையும் வைத்து, எங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு, தோல்வியே ஏற்படும் என, யாரை மனதில் வைத்து சொன்னார்? பூணூல் அணிந்த ராஜாஜியின், சுதந்திரா கட்சியுடன், 1967ல் தேர்தல் கூட்டணி வைத்து, வென்று, தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததை அவர் மறந்து விட்டாரா? இவர் புரிந்த ஊழல்களின் பட்டியலை, கவர்னரிடம், மனுவாகக் கொடுத்து, அவரது ஆட்சி வீழ்ச்சியடையக் காரணமாக இருந்த, காம்ரேட் கல்யாணசுந்தரமும், எம்.ஜி.ஆரும் பூணூல் போட்டவர்களா?
ஜாதி அடிப்படையில், பூணூல் போட்டவர்கள் எல்லாம் எதிரிகள் என்று அவர் சொன்னால், அது முற்றிலும் தவறு. பிராமணர்கள் மட்டும் அல்ல; வைசியர், சத்திரியர் போன்றவர்களுக்கும் பூணூல் அணியும் பழக்கம் உண்டு.அன்னியப் படையெடுப்பாளரிடம் தோற்று, கொடுமைகளுக்கு ஆளான சத்திரியர், போர்த் தொழிலையும், தங்கள் அடையாளமான பூணூலையும் துறந்து, விவசாயம் போன்ற, வேறு தொழில்களுக்கு போய் விட்டனர் என்பது வரலாறு. வன்னியர்குல சத்திரியர், சத்திரிய நாடார் என்று, இப்போதும், சில சமுதாயத்தவரின் பெயர் இருப்பதை காணலாம். கருணீகர்கள், விஸ்வகர்மாக்களான பொற்கொல்லர், தச்சு மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களும் பூணூல் போடுபவர்களே.
ஆகவே, கருணாநிதி, ஒட்டு மொத்தமாக பூணூல் போடுபவர்கள் எல்லாம், தன்னை சேர்ந்தவர்களுக்கு பகையாளிகள் என்று கருதிக் கொண்டிருப்பது, பெரும்பிழை.
தி.மு.க.,வினரின் சரிவுக்கு காரணம், அவர்கள் புரிந்த, வரலாறு காணாத ஊழல்களே என்பதை மறைத்து, மக்களையும், ஏன், தன் கட்சிக்காரர்களையும் திசை திருப்ப நினைக்கும் கருணாநிதியின் தந்திரம், கண்டிப்பாக தோல்வியை தழுவும்.
அன்றும்இப்படித் தான்வந்தனர்!கார்த்திகா நந்தகுமார், அருவங்காடு, நீலகிரி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்த பிறகும், மீண்டும், அடிமையாக துடிக்கிறது, நம் இந்தியா.அன்று, வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பியர்கள், சூழ்ச்சி செய்து, நம்மை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்தனர். சிதறுண்டு கிடந்த சிற்றரசுகளுக்கு, கடன் கொடுத்து, அதை திருப்பிச் செலுத்த முடியாத, அரசுகளிடமிருந்து, வரிவசூல் செய்யும் உரிமையை பறித்து, காலப்போக்கில், நம்மை அடிமைப்படுத்தினர்.
இன்றும், அதே சூழ்ச்சி தான். ஆனால், நேரடி அன்னிய முதலீடு என்று, வேறு பெயர் தாங்கி வந்திருக்கிறது. 
இது தொடர்பாக, இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை, நிறைவேற்றத் தவறினால், உலக வங்கியில், இந்தியா, கடன் பெறும் தகுதியை இழக்க நேரிடுமாம்.
அதாவது, இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த, கடன் பெற வேண்டுமானால், வியாபாரம் செய்யும் உரிமையை, அவர்களுக்கு வழங்க வேண்டும்.
நம்புங்கள் இந்தியரே... இப்போது, அவர்கள் வியாபாரம் செய்ய மட்டும் தான் அனுமதி கேட்கின்றனர். இதில், நாடுபிடிக்கும் திட்டமோ, நாட்டின் செல்வ வளத்தை சுரண்டும் எண்ணமோ, அவர்களுக்கு சிறிதும் கிடையாது.
இதற்கு, காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும், அரசியல் நிபுணர்களும், பொருளாதார மேதைகளும், அவர்களை பின்னிருந்து இயக்குகிற, இந்திய திருமகள் சோனியாவும் சாட்சி.
இந்தியாவை, வெளிநாடுகளுக்கு அடகு வைக்க, இத்தனை பிரயத்தனப்படுகிற காங்கிரஸ் அரசு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்பு பணத்தை மீட்டெடுக்க மெத்தனம் காட்டுவது ஏன்? வரி ஏய்ப்பு செய்து வரும் மிகப்பெரிய நிறுவனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?முட்டாள்கள் வாழும் நாட்டில், கோமாளிகளின் ஆட்சி.என்ன செய்வது?
ராயல்சல்யூட்அடிப்போம்!செ.மாரியப்பன், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: கடந்த மாதம், மானாமதுரை என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் பிரபு, பாரதி ஆகியோரின் பெற்றோர், தங்கள் மகன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.கோஷ்டி தகராறை தடுக்கச் சென்று கண் டித்த, தன் கடமையே கண்ணாக செயல்பட்ட இளம் ஆய்வாளர் ஆல்வின் சுதன், ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டாரே, இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?தனக்கு வேலை கிடைத்ததும், அம்மா, அப்பா, தங்கை, தம்பி, நீங்கள்இனி, கூலி வேலைக்கு செல்ல வேண்டாம்; அனைவருக்கும், நான் சாப்பாடு போடுகிறேன் என்று சொன்னாரே... 
அவரது குடும்பத்தின்இன்றைய கதி?இதற்கு எந்த விசாரணை நடத்துவதாம்?நான்காயிரம் பேர் நிம்மதியை,நான்கு பேர் கெடுக்கின்றனர் என்றால், அந்த கிருமியை அழிப்பதில் தவறில்லை என்கிறார், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி., வெள்ளத்துரை!அந்த ரவுடிகளை, அவ்வளவு நாட்கள் விட்டு வைத்ததே தவறு. அந்த விஷ கிருமிகளை, அங்கேயே சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும், காவல்துறை. கையில் துப்பாக்கி இல்லாத காரணத்தால், அந்த ரவுடிகள், அப்போது உயிர் தப்பினர். 
இதற்கு நீதி விசாரணை, சி.பி.ஐ., விசாரணை என்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.அழிக்க வேண்டிய கிருமிகளை, என்கவுன்டரில் அழித்து விட்டனர் காவல் துறையினர்.இனி, மக்கள் நிம்மதியாக இருப்பர். எனவே, தமிழக மக்கள் சார்பாக, மானாமதுரை காவல்துறைக்கு, ஒரு ராயல் சல்யூட் போட்டு, வாழ்த்து சொல்லுவோம்.

50வது நாளை கொண்டாடியது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

சினிமாவில் வெற்றி விழா கொண்டாடி ஷீல்டு கொடுப்பதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. காரணம் எந்தப் படமும் 100 நாள் வரை ஓடுவதில்லை. சில படங்களை வேண்டுமென்றே 100 நாள் ஓட்டுவார்கள். இதனால் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் வெளியூர்களில் தியேட்டரில் காணோம். என்றாலும் சென்னையில் திரையிட்ட தியேட்டர்கள் அனைத்திலும் 50 நாட்கள் ஓடிவிட்டது. இதையே ஒரு விழா எடுத்து கொண்டாடிவிட்டார்கள்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் அனைவருக்கும் ஷீல்டு கொடுத்தார். பார்த்திபன், சிவஸ்ரீ சீனிவாசன், யுடிவி தனஞ்செயன், கேயார், யூகி சேது, விமல், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோ விஜய்சேதுபதி என்னாச்சு... என்ற புகழ்பெற்ற வசனத்தை பேசினர். ஹீரோயின் காயத்திரி படத்தில் வந்தது போல் இல்லாமல் நல்ல மேக்அப்புடன் அழகாக வந்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் நடிகைகளுக்கு ஷீல்டு கொடுக்கும் படம் போட்டோகிராபர்களுக்கு கிடைத்தது.

சைக்கோ ஹீரோயின் படம்

ஹீரோக்கள்தான் சைக்கோவாக நடிக்க வேண்டுமா, ஏன் ஹீரோயின்கள் சைக்கோவாக இருக்க கூடாதா என்று இயக்குனர் இதயன் ரூம் போட்டு யோசித்து எழுதிய கதை சுடச்சுட என்ற படமாக வரப்போகிறது. சோபினா வாசுதேவ் என்ற புதுமுகம்தான் அந்த சைக்கோ ஹீரோயின். பள்ளியில் படிக்கும் அவர் தன் சைக்கோ குணங்களை மறைத்து வாழ்கிறார். அவர் தோழி ஸ்ரீஇராவுக்கு ஒரு அநியாயம் நேர்ந்து விடுகிறது. அந்த அநியாயத்தை செய்தவர்களை தேடிப்பிடித்து வெறியோடு பழிவாங்குவார் சோபினா. ஹீரோ நளன். அவரது வேலை ஹீரோயினை காதலித்து அவளது தோழியை சீரழிப்பதுதான். அதாவது நளன் ஆண்டி ஹீரோவாம். இதுதான் சுடச்சுட படத்தின் கதை. காலை 6 மணி தொடங்கி மாலை 6 வரை 12 மணி நேரத்தில் நடக்கும் கதை. சென்னையை சுற்றி சுற்றி படம் எடுத்து முடித்து விட்டார்கள். பிப்ரவரியில் ரிலீஸ் செய்கிறார்கள்.

சொந்த ஊரில் சூப்பர் வெற்றி * தோனி தலைமையில் சாதித்தது இந்தியா * மீண்டும் வீழ்ந்தது இங்கிலாந்து

ராஞ்சி:தோனியின் சொந்த ஊரில் இந்திய அணி நேற்று சூப்பர் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பவுலர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. அடுத்து கொச்சியில் இந்திய அணி வெல்ல, தொடர் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி நேற்று ராஞ்சியில் நடந்தது.சொந்த மண்ணில் முதன் முதலாக களமிறங்கிய கேப்டன் தோனி, டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் சேர்க்கப்பட்டார்.நிதான துவக்கம்:இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக், இயான் பெல் ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. ஷமி அகமது, புவனேஷ்வர் குமார் பந்துகளில் பவுண்டரி அடித்த குக், 17 ரன்களில் அவுட்டானார்.பின் வந்த பீட்டர்சன் சற்று வேகம் காட்டினார். புவனேஷ்வர் ஓவரில் பெல்லும், இஷாந்த் ஓவரில் பீட்டர்சனும் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் பீட்டர்சன் (17), அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேற, போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பத் துவங்கியது.சபாஷ் ஜடேஜா:பெல் 25 ரன்னுக்கு புவனேஷ்வர் வேகத்தில் அவுட்டானார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்கனை (10) அஷ்வின் திருப்பி அனுப்பினார். தனது இரண்டாவது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா, 2வது பந்தில் கீஸ்வெட்டர், கடைசி பந்தில் சமித் படேல் என, இருவரையும் டக் அவுட்டாக்க, மைதானம் உற்சாக வெள்ளத்தில் மிதந்தது.சுருண்டது இங்கி.,:98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய இங்கிலாந்து அணியை, ரூட், பிரஸ்னன் இணைந்து மீட்க முயற்சித்தனர். பிரஸ்னன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். இஷாந்த் பந்தில் பவுண்டரி அடித்த ரூட் (39), அடுத்த பந்திலேயே அவுட்டானார்.தொடர்ந்து பிரஸ்னன் (25), அஷ்வின் சுழலில் போல்டானார். ஸ்டீவன் (3) வந்தவேகத்தில் நடையை கட்டினார். கடைசியில் டெர்ன்பாக், டக் அவுட்டாக, இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 155 ரன்களுக்கு சுருண்டது.இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா 3, அஷ்வின், இஷாந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.ரகானே டக்:போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு, மீண்டும் மோசமான துவக்கம் கிடைத்தது. ரகானே டக் அவுட்டானார். பின் வந்த விராத் கோஹ்லி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.டெர்ன்பாக் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய இவர், ஸ்டீவன் ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரி அடித்தார். வழக்கம் போல பந்துகளை வீணடித்த காம்பிர் 33 ரன்களில் (53 பந்து) திரும்பினார்.கோஹ்லி அரைசதம்:அடுத்து கோஹ்லி, யுவராஜ் சிங் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். டிரட்வெல் பந்துகளில் இரு சிக்சர் விளாசினார் கோஹ்லி. இவர், சர்வதேச ஒருநாள் அரங்கில் 22 வது, இங்கிலாந்துக்கு எதிராக 3வது அரைசதம் கடந்தார்.மறுமுனையில் யுவராஜ் சிங் பவுண்டரி மழை பொழிந்தார். பிரஸ்னன், டிரட்வெல் பந்துகளில் பவுண்டரி அடித்த இவர், டெர்ன்பாக் பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்தார். 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங், டிரட்வெல் சுழலில் சிக்கினார்.அசத்தல் வெற்றி:சொந்தமண்ணில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்ய வந்த தோனி, பவுண்டரி அடித்து ரன்கணக்கைத் துவக்கினார். தொடர்ந்து ஸ்டீவன் பந்தில் மற்றொரு பவுண்டரி விளாச, இந்திய அணி 28.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.ஆட்டநாயகன் விருது வென்ற விராத் கோஹ்லி (77), தோனி (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி மொகாலியில் வரும் 23ம் தேதி நடக்கிறது.தொடர்கிறது அம்பயர் சொதப்பல்கொச்சி போட்டியில் அம்பயர்களின் செயல்பாடு மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. நேற்று மீண்டும் இது தொடர்ந்து. இஷாந்த் சர்மா வீசிய பந்து பீட்டர்சன் கால் பேடில் பட்டு சென்றது. இதைப் பிடித்த தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அப்பீல் செய்ய, அம்பயர் ரவி (இந்தியா) உடனடியாக அவுட் கொடுத்து, பீட்டர்சனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.அதிவேக 4000 ரன்கள்இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதி வேகமாக 4000 ரன்களை கடந்த முதல் வீரர், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார் விராத் கோஹ்லி (4028). நேற்று 93 வது இன்னிங்சில் (96வது போட்டி) விளையாடிய இவர், 49 ரன்கள் எடுத்த போது, இந்த இலக்கை எட்டினார். இந்திய அளவில் கங்குலி, 105 இன்னிங்சில் (110 போட்டி) 4000 ரன்களை கடந்துள்ளார்.* சர்வதேச அளவில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (88 இன்னிங்ஸ்) உள்ளார். இதே அணியின் கிரீனிட்ஜ் (96வது இன்னிங்ஸ்) மூன்றாவது இடத்தில் உள்ளார்.அணியில் மாற்றம் இல்லைஇங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான மொகாலி (ஜன., 23), தரம்சாலா (ஜன., 27) போட்டிகளில், முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய அணியே பங்கேற்கும். எவ்வித மாற்றமும் இல்லை, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பவுலர்களுக்கு பாராட்டு:வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறுகையில், அணியின் சேசிங்கை பார்த்த போது, எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வராது என்று நினைத்தேன். கடைசியில் யுவராஜ் சிங் அவுட்டானதும், சொந்த மண்ணில் பேட்டிங் செய்ய களமிறங்கினேன். புவனேஷ்வர் குமார், ஷமி அகமது ஆகியோர் புதியவர்கள். இங்கு சிறப்பாக செயல்பட்டனர். இப்போட்டியின் மூலம் அவர்களுக்கு அதிக நம்பிக்கை கிடைத்திருக்கும், என்றார்

தந்தத்தில் பிளாஸ்டிக் குழாயுடன் சுற்றி திரியும் காட்டு யானை

தந்தத்தில் பிளாஸ்டிக் குழாயுடன் சுற்றி திரியும் காட்டு யானைமூணாறு:மூணாறில், தந்தத்தில் சிக்கிய, பிளாஸ்டிக் குழாயுடன், காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. மூணாறு பகுதியில், ஒரு குட்டியுடன், நான்கு காட்டு யானைகள்சுற்றி வருகின்றன. தற்போது, இந்த காட்டு யானைகள், மாட்டுப்பட்டி அணையின், கரையோரத்தில் முகாமிட்டுள்ளன.இந்த கூட்டத்தைச் சேர்ந்த, ஆண் யானை ஒன்றின், வலது பக்க தந்தத்தில், உறை அணிந்தது போன்று, கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் குழாய் சிக்கியுள்ளது. இதை வெளியே எடுக்க இயலாத நிலையில், யானை வலம் வருகிறது. இதனால், எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், குழாய் எவ்வாறு தந்தத்தில் சிக்கியது என்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மூணாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பிளாஸ்டிக் குழாய்கள் மூலம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.இது,யானையின் தந்தத்தில், எதிர்பாராத விதத்தில் சிக்கியிருக்கலாம் என, கருதப்படுகிறது.

பெண் தற்கொலை: இருவர் கைது

பெருங்குடி;பெருங்குடி சமத்துவபுரம் அருகே தனியார் தோட்டத்தில், மகேந்திரன் என்பவர் குடும்பத்துடன் தங்கி, காவலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மகள் ரஞ்சிதா, 19. இவரும், வலையங்குளம் மச்சக்காளை மகன் வடிவேலுவும், 21, காதலித்தனர். சில நாட்களுக்கு முன்பு வடிவேல், மச்சகாளை ஆகியோர் ரஞ்சிதா வீட்டிற்கு சென்று, அவதூறாக பேசினர். அன்று இரவு 8 மணிக்கு வெளியில் சென்ற ரஞ்சிதா வீடு திரும்பவில்லை. நேற்று காலை, மகேந்திரன் வேலை பார்க்கும் தோட்டத்திலுள்ள கிணற்றில் ரஞ்சிதா இறந்து கிடந்தார். இதுகுறித்து மகேந்திரன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். வடிவேல், மச்சக்காளையை @பாலீசார் கைது செய்தனர்.

மதுரையில் வழக்குப்பதிவு காணாத "சைபர் கிரைம்':மொபைல் போன் பயன்பாடு எதிரொலி

மதுரை:மொபைல் போன் பயன்பாடு எதிரொலியாக, மதுரை சைபர் கிரைம் பிரிவில் புகார்கள் ஏதும் வராததால், 2012ல் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.மதுரையில் கம்ப்யூட்டர், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடி உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் சைபர் கிரைம் பிரிவு செயல்படுகிறது. இதுதொடர்பான குற்றங்களை தடுக்க, பிரவுசிங் சென்டர்கள் நடத்தும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கமிஷனர் சஞ்சய்மாத்தூர் பேசுகையில், பிரவுசிங் சென்டர் நடத்துவோர், அதற்கான அனுமதியை பெற வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
அனுமதியின்றி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும். சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களை செய்ய அனுமதிப்பதால், உரிமையாளர் தான் பெரிதும் பாதிக்கப்படுவார். இதை உணர்ந்து குற்றங்கள் நடக்க அனுமதிக்கக்கூடாது, என்றார்.பிரவுசிங் சென்டர்களில் ஆபாச படம் பார்ப்பது, ஆபாச படங்களில் சினிமா நடிகைகளின் படத்தை இணைத்து வெளியிடுவது போன்ற குற்றங்கள் நடந்தன.
தற்போது மொபைல் போனிலேயே அனைத்தையும் பார்த்து விடுகின்றனர். பேஸ் புக்கில் பெயர்களை போலியாக பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் புதிதாக முளைத்துள்ளன. மதுரை சைபர் கிரைம் பிரிவில் 2012ல் புகார்கள் ஏதும் வராததால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மதுரையில் அனுமதி பெற்ற 120 பிரவுசிங் சென்டர்கள் செயல்படுகின்றன.

Saturday, January 19, 2013


கனடாவில் மகர விளக்கு பூஜை

ஜனவரி 19,2013  IST
பர்ன்பை : கனடாவின் பர்ன்பை பகுதியில் உள்ள அருள்மிகு துர்க்கா தேவி ஆலயத்தில் ஜனவரி 13ம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. அன்று மா‌லை ஐயப்பனுக்கு நெய், தயி்ர்,விபூதி,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பக்தர்களின் பஜனைகளும் நடைபெற்றது. மாலை அணிந்த பக்தர்கள் நெய் தேங்காய் தயாரித்து இருமுடி கட்டிக் கொண்டனர். சுவாமி ஐயப்பனைத் தொடர்ந்து 18 படிகளிலும் விளக்கேற்றி படிபூஜை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்து மகரஜோதி காட்சி தரும் வேளையில் மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்களின் சரண கோஷம். காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், "டாஸ் வென்ற இந்திய அணி "பீல்டிங் தேர்வு செய்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. 
மூன்றாவது போட்டி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி "பீல்டிங் "பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்சிற்குப் பதில் பிரஸ்னன் இடம் பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு குக், பெல் இணைந்து நிதான துவக்கம் தந்தனர். பின் குக், பீட்டர்சன் தலா 17 ரன்களில் அவுட்டாகினர். பெல் 25 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. 

Friday, January 18, 2013

மனைவிக்கு "கேன்சர்' எனக்கூறி 2வது திருமணம் செய்தவர் கைது
மதுரை:மனைவிக்கு "கேன்சர்' எனக்கூறி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த, மதுரை சொக்கலிங்கநகர் சுரேஷ்,32 கைது செய்யப்பட்டார்.சுரேஷ் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவருக்கு மனைவி ராதா,30. இரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடித்து விட்டு தகராறு செய்ததால், மனைவியிடம் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். கணவருக்கு 2வது திருமணம் நடந்ததாக, மதுரை தெற்கு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மனைவி ராதா புகார் செய்தார். ராதா கூறுகையில்,""என்னுடன் சண்டையிட்டு, வீட்டுக்கு வராமல் இருந்தார். அலங்காநல்லூர் சின்ன இலந்தைக்குளம் செல்வியுடன், 22, பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு "கேன்சர்' என்றும், சில மாதங்களில் இறந்து விடுவேன் எனவும் பொய் கூறி, நேற்று முன் தினம் அவரை திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகளுடன் வருமானமின்றி கஷ்டப்படுகிறேன்,'' என்றார்.உதவி கமிஷனர் ராஜாமணி உத்தரவின்படி, சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

மொய்ப்பணம் திருட்டு
செக்கானூரணி:கருமாத்தூர் அருகே உள்ள கேசம்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் காசிமாயனின் திருமணம் நேற்று முன்தினம் ஒரு மண்டபத்தில் நடந்தது. அன்று மாலை 4மணியளவில் பாலுவின் வீட்டுக்கு சென்ற மதுரை செல்லூரைச் சேர்ந்த குமார் மனைவி காசியம்மாள்,30, ரவிக்குமார் மனைவி ஈஸ்வரி,28, ஆகியோர் "மொய்' எழுதுவது போல் நடித்து "மொய்'பானையில் இருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றனர். பாலு கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர். 



கற்பழிப்பு:45; பலாத்காரம்:77: தலைநகர் இன்னும் மாறவில்லை
புதுடில்லி: கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பலாத்கார முயற்சி போன்றவை தலைநகர் டில்லியில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பஸ்சில் வந்து கொண்டிருந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் வன்முறை கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை ‌மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ல் மரணமடைந்தார். இதனையடுத்து தலைநகர் டில்லியில் இது வரையில் வரலாறு காணாத அளவில் வயது வித்தியாசமின்றி , அரசியல் கட்சிகளை தவிர்த்த மக்கள் போராட்டம் வெடித்தது. மக்களை சமாதானப்படுத்த வந்த டில்லி முதல்வர் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு போராட்‌டம் தொடர்ந்து நீடித்தது. மக்களின் புரட்சியை கண்ட மத்திய அரசு அவசர அவசரமாக கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை மாற்றியமைத்து நடைமுறைக்கு கொண்டு வர பரிசீலனை செய்துள்ளது. அதே போல் ஒவ்வொரு மாநில அரசும் பாலியல் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற துவங்கியது.

மேற்கண்ட மாணவியின் இறப்பு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் தலைநகர் டில்லியில் 45 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் 75 பலாத்கார வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 26 வழக்குகளை தவிர்த்து பெரும்பாலானவை குடும்ப நண்பர்கள் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. .

தலைநகர் டில்லிக்குட்பட்ட பகுதிகளான கோவிந்தபுரி 21, சங்கம் விஹார் 17, மற்றும் ஷாகர்பூர் போலீஸ் நிலையங்களில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் கற்பழிப்பு வழக்கு 572-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 706 ஆகவும், பலாத்கார முயற்சி வழக்‌கு 2011-ல் 657-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 727 ஆகவும் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் 94 சதவீத வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ‌நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில் மக்களிடை‌‌‌‌யே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருதாககூறினார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாரின் எண்‌ணிக்கை அதிகரிக்கவும்,அவர்களுக்கு தேவையான ரோந்து வாகனம், மோட்டார்சைக்கிள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பு பணிய‌ில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கூறினார்.

ஒரு லட்சம் மக்கள் தொகை கணக்கின் படி கடந்த 2005-ம்ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 4.42 லிருந்து 2012-ம் ஆண்டில் 4.15 ஆக குறைந்துள்ளதாக போலீஸ் புள்ளிவிவர கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளான புள்ளி விவர ஆய்வின் படி நாள் ஒன்றுக்கு மூன்று கற்பழிப்பு சம்பவங்களும், ஐந்து பாலத்கார முயற்சி சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.

Current events
உழவன் வீட்டில் விழும் இழவு, நாட்டின் தலைமீது விழும் அதிர்வு!

வறுமைக்குப் பயந்து இன்றைய டெல்டா விவசாயிகள் தங்களைத் தாங்களே அறுவடைசெய்து கொள்கிறார்களே?

இது மிக மோசமான சமிக்ஞை!

'நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது’ என்பது பழைய கவிதை.

'சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்; அதனால்

உழன்றும் உழவே தலை’ - என்பது அதற்கும் முந்தைய குறள். உலகம் உழவையே நம்பி இயங்குகிறது, அதனால் எவ்வளவு துன்பம் வரினும் உழவே உயர்ந்தது என்கிறார் வள்ளுவர். ஆனால் உழவை கேவலமான தொழிலாகவும் உழவனை நாட்டின் சுமையாகவும் நினைக்கும் சமூகமாக மாறிவிட்டோம். ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால் நூறு பேர் பட்டினி கிடக்கப் போகிறார்கள், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருளின் உற்பத்தி குறையப் போகிறது என்று அர்த்தம். மிக மோசமான நிலைமையை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. உழவன் வீட்டில் விழும் இழவு, நாட்டின் தலைமீது விழும் அதிர்வு!
அடகுக்கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி முற்றுகை
ஊமச்சிகுளம்:மதுரையில் பல கோடி ரூபாய் அடகு நகைகளுடன் மாயமான கடை உரிமையாளரை கைது செய்து, நகைகளை மீட்டுத் தரக்கோரி வாடிக்கையாளர்கள் ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
மதுரை அய்யர்பங்களா லட்சுமணன் உச்சப்பரம்பு ரோட்டில் "முத்து பைனான்ஸ்' நகை அடகுக் கடை நடத்தினார். குறைந்த வட்டியில் நகைக் கடன் வழங்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதியினர் நகைகளை அடகு வைத்து பணம் 
பெற்றனர்.
பொங்கலையொட்டி நகைகளை மீட்க பலர் பணம் கட்டினர். இருநாட்களுக்குப் பின் நகைகளை தருவதாக கூறினார். குறிப்பிட்ட நாளில் நகையை பெற வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தனர். கடை பூட்டிவிட்டு லட்சுமணன் மாயமானார். அடகு வைத்தவர்கள் கடையை முற்றுகையிட்டனர். 
இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கடையில் வேலை பார்த்த மூர்த்தியை அழைத்து விசாரித்து வருகிறார். கடை உரிமையாளரை கைது செய்ய பாலகிருஷ்ணன் எஸ்.பி., 4 தனிப்படை அமைத்துள்ளார்.
லட்சுமணனை கைது செய்ய கோரி, வாடிக்கையாளர்கள் ஊமச்சிகுளம் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்தனர். லட்சுமணன் குறித்து தெரிவித்தால் கைது செய்வதாக போலீசார் கூறினர். இதனால், ஆத்திரமுற்ற வாடிக்கையாளர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டதுடன், மறியலில் ஈடுபட்டனர்.
ராஜ்குமார், காந்திபுரம்: புதூர் காந்திபுரத்தை சேர்ந்த 50பேர் 200 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளோம். சிலர் நகையை திருப்ப பணம் கட்டினர். பணத்தை பெற்ற லட்சுமணன் ஓடிவிட்டார்.
போஸ், வண்டியூர்: அடகு வைத்துள்ள 15 பவுன் நகையை திருப்ப ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினேன். திடீரென அடகு கடை உரிமையாளர் ஓடிவிட்டார். 
டி.எஸ்.பி., சீனிவாசபெருமாள்: நகை அடகு வைத்த ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். உரிமையாளர் லட்சுமணன் குடும்பத்தினர் மற்றும் வேலை பார்த்தவர்களை அழைத்து விசாரித்து வருகிறோம். அவரை கைது செய்தவுடன் நகைகளை மீட்டு ஒப்படைப்போம்.
ஆறு மைல் கடந்தும் மேய்ச்சல் இல்லை வறட்சியில் மடியும் கன்றுகள்
மதுரை:மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடும் வறட்சியால் கால்
நடைகள் மேய்ச்சலின்றி தவிக்கின்றன. பால் இன்றி, கன்றுகள் மடிந்து வரும் பரிதாபச் சூழல் ஏற்பட்டுள்ளது. 
வடகிழக்கு பருவ மழையில் பயன்பெறும் தமிழகத்திற்கு, இம்முறை ஏமாற்றமே 
மிஞ்சியது. குறிப்பாக, தென்மாவட்டங்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மழையில்லாமல், விவசாய பயிர்கள் கருகின. வழக்கத்திற்கு மாறாக வெயில் கடுமையாக இருந்ததால், கண்மாய்கள் வறண்டன. 
நீரின்றி காய்ந்த பயிர்களை, விவசாயிகளே கால்நடைகளுக்கு இரையாக்கினர். நடப்பாண்டு விவசாயம் பொய்த்து போன நிலையில், அதை நம்பியிருந்த கால்நடைகளுக்கும் சோகம் 
ஏற்பட்டுள்ளது. நீரின்றி 
மேய்ச்சல் புற்கள், சருகாய் மாறியுள்ளன. 
குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தவிக்கின்றன. வெளியூரிலிருந்து வரும் மாடுகள், தங்கள் கிராமத்தில் மேய்ச்சலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தகராறுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது. மேய்ச்சல் குறைந்ததால், பசுக்களின் பால் உற்பத்தி பாதித்து, கன்றுகள் இறப்பு அதிகரித்துள்ளது.
வழக்கமாய் மேய்ச்சலுக்கு, ஒரு மைல் தூரம் பயணிக்கும் மாடுகள், தற்போது ஆறு மைல் தூரம் வரை, நடக்கின்றன.
அதிலும் மேய்ச்சலின்றி, 
சோர்வடைந்து, எடை குறைந்து வருகின்றன. 
சிவகங்கை மாவட்டம் 
பழையனூர், வல்லாரேந்தலில் இருந்து, மதுரை களிமங்கலம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு 
வந்த மாடுகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், வேறு பகுதிக்கு நடைகட்டின. 
ஊர்காவலன், 65, கூறியதாவது: விபரம் தெரிந்த நாள் முதல், கால்நடை மேய்ச்சல் தொழிலில் உள்ளேன். இப்படியொரு பஞ்சத்தை பார்த்ததில்லை. மழையின்றி, நிலங்கள் வறண்டு போயுள்ளன; குளங்களில் நீரில்லை. இரையின்றி மாடுகள் மயங்குகின்றன. வேறு ஊருக்குச் சென்றால், "எங்கள் மாடுகளுக்கு மேய்ச்சல் வேண்டும்,' என, விரட்டுகின்றனர். நேற்று ஒரு கிராமத்தில், அடித்து விரட்டினர்;தப்பி வந்தோம். எங்களின் ஏழு கன்றுகள், இதுவரை 
இறந்துள்ளன. இரை இல்லாமல், மாடுகள் அனைத்தும், 
"அடிமாடு' தோற்றத்திற்கு மாறிவிட்டன, என்றார்.
மனைவி இறந்த துக்கத்தில்முதியவர் தற்கொலை
சென்னை:மனைவி இறந்த துக்கம் தாளாத முதியவர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.எண்ணூர் பாரதியார் நகரில் வசித்தவர் ஆவடிசாமி, 87; இவரின் மனைவி வள்ளியம்மாள், 80. இவர்களுக்கு, நான்கு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆவடிசாமியும், வள்ளியம்மாளும் தனியே வசித்தனர்.நான்கு நாட்களுக்கு முன், வள்ளியம்மாள் திடீரென இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத ஆவடிசாமி, வீட்டு மின் விசிறியில் நேற்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து, எண்ணூர் போலீசார் விசாரிக்கின்றனர்

கடல் படத்தில் முத்தக்காட்சி!

kadal kisisg seen!
மணிரத்னம் இயக்கி வரும் படம் கடல். இதில் கார்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு அதிரடியான முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. லிப் லாக் எனப்படும் ஆங்கில முத்தக் காட்சி இது. படத்திற்கு தெலுங்கு, மற்றும் தமிழில் டிரைய்லர் வெளியிடுள்ளார் மணிரத்னம். இதில் தெலுங்கு டிரைய்லரில் இந்த முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் படம் தொடர்பாக வெளியிட்டுள்ள போட்டோக்களில் இந்த முத்தக் காட்சியை வெளியிடவில்லை. "பத்து விநாடிகள் இடம்பெறும் இந்த முத்தக்காட்சி படத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு ராதா முதலில் தயங்கினார் ஆனால் துளசி தைரியமாக நடித்ததார். ஹீரோ கவுதம் பல டேக்குகள் வாங்கி நடித்தார். 10 விநாடி முத்தக் காட்சி எடுக்க நான்கு மணி நேரம் ஆனது. துளசி ரொம்ப தயங்கியதால் முக்கியமான டெக்னீஷியன்கள் தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டு படம் பிடிக்கப்பட்டது" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-கும், ராதாவும் பூக்களுக்குள் ஆடையின்றி படுத்திருப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் வேண்டுமென்று கருதிய மணிரத்னம் இந்த முத்தக் காட்சியை வைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்தக் காட்சி போன்று இதுவும் பரபரப்பாக பேசப்படுமாம்

Wednesday, January 9, 2013


மாநகராட்சியில் "டெங்கு' அபாயம்: மீண்டும் அதிகாரிகள் "குறட்டை'யால் பணிமந்தம்
மதுரை:மதுரை மாநகராட்சியில், "டெங்கு' காய்ச்சல் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, கொசு ஒழிப்பு பணி, முன்பை விட மந்த கதியில் நடக்கிறது. இதனால், மீண்டும் கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.கடந்த ஜூனில், மாநகராட்சியில் கால் பதித்த "டெங்கு', ஐந்து மாதங்களுக்கு ஆட்டிப் படைத்தது. உயிர் பலி, உடல்நலக் குறைவு என, பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்தனர். உயிரிழப்பு அதிகரித்ததால், "டெங்கு' பரப்பும் "ஏடிஸ்' கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள், தீவிரப்படுத்தப்பட்டன.
விழிப்புணர்வு நாடகங்கள், கூடுதல் கொசு ஒழிப்பு இயந்திரங்கள், மருந்துகள் வாங்க, சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, கூடுதல் பணியாளர்கள் மூலம், பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதனால், "டெங்கு' கட்டுப்படுத்தப்பட்டு, பாதிப்பு குறைந்தது. இதையடுத்து, கொசு ஒழிக்கும் பணி மீண்டும் மந்தமாக நடக்கிறது. ஜூனில் டெங்கு பரவிய போது, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, அதன் பின் கவனிக்க தவறியதே, ஆகஸ்ட்டில் டெங்கு தீவிரமாக காரணமானது. அதே பாணியில், தற்போது மீண்டும் கொசு ஒழிப்பு பணி, மந்தமாகியுள்ளது.
இதனால், மீண்டும் "ஏடிஸ்' கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. "வாரந்தோறும், கொசு ஒழிப்பு பணி நடக்கும் வார்டுகள் குறித்த விபரம் வெளியிடப்படும்', என, கமிஷனர் நந்தகோபால் தெரிவித்தார். முதல் வாரம் வெளியிட்டதுடன் சரி, அதன் பின், எந்த பட்டியலும் வெளியிடப்படவில்லை. எந்த வார்டில் பணி நடக்க வேண்டும் என்பதை தேர்வு செய்வதில் கூட, மண்டல அலுவலகங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதே நிலை தொடர்ந்தால், மீண்டும் கொசுக்களின் "ரீங்காரம்' கேட்கும் நாள், வெகு தொலைவில் இல்லை.

Current events

Sunday, January 6, 2013


அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டுமாணவர்கள் பயப்பட வேண்டாம்
மதுரை:""கணிதம், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டு, மாணவர்கள் பயப்பட வேண்டாம். ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்,'' என, மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 19வது ஆண்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசினார். 
கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: நல்ல வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் உருவாக்காத கல்வியால், எப்பயனும் இல்லை. கல்வியில் சுதந்திரமும், நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடும் இல்லாததால் தான், தரமான உயர்கல்வியைத் தரமுடிகிறது. இந்தியாவில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில், குறுகிய காலத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளோம். அதன் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளோம். நாக் கமிட்டி மூன்றாம் முறையாக ஆய்வு செய்துள்ளனர், என்றார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசியதாவது:
கல்வி ஒன்று தான், மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாமல் இருக்கும் செல்வம். அறிவியலுக்கு இரு முகங்கள் உண்டு. ஏவுகணை, தொழில்நுட்பம் மூலம் புறவசதிகளை பெருக்குவது ஒரு முகம். சிந்தனைகளை உருவாக்குவது அகநுட்ப அறிவியல், இன்னொரு முகம்.நிறைய கற்கும் போது தான் தெளிவு வரும். புதிய ஆளுமை பிறக்கும். மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்க வேண்டும். அவற்றை, பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் அனுமதிக்கிற புத்தகங்களை படிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டியதில்லை. படிப்பதை ஈடுபாட்டுடன் செய்தால், அறிவியலும், தொழில்நுட்பமும் கையில் வரும், என்றார்.நிர்வாக செயல் அதிகாரி ராம்குமார் முன்னிலை வகித்தார். மேரிடைம் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ் துறைத் தலைவிசுப்பலட்சுமி, கல்லூரி முதல்வர் சண்முகம், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குனர் (பொறுப்பு) ஸ்ரீராம் பங்கேற்றனர்.


காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த, நர்சை அரிவாளால் வெட்டி கொலை செய்த, மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை, காளையார்கோவில் அருகே களைப்பிளான் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பு. இவர் மகள் கொங்கேஸ்வரி, 26. காளையார்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக இருந்தார். அதே ஊரை சேர்ந்த எல்.ஐ.சி., ஏஜன்ட் ராஜா,38. இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி, பணி முடித்து வரும் நர்சை, ராஜா தனது டூவீலரில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். இவர்களது தொடர்பை அறிந்த, ராஜாவின் மனைவி பாக்கியம், 34, கண்டித்துள்ளார். அதற்கு பின்னரும், தொடர்பு நீட்டித்து வந்துள்ளது. இதில், ஆத்திரமுற்ற, பாக்கியம், நர்சை கொலை செய்யும் நோக்கில், கடந்த 3 நாட்களாக, வீட்டிற்கு இரவில் வரும் அவரை நோட்டமிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8.45 மணிக்கு வழக்கம் போல், நர்சு கொங்கேஸ்வரியை, ராஜா தனது டூவீலரில் அழைத்து வந்து, வீட்டிற்கு அருகே சிரமம் விலக்கு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றார். இதை, ராஜாவின் மனைவி பார்த்துவிட்டார். கொலை: இதில், ஆத்திரமுற்ற பாக்கியம், அரிவாளால், வீட்டிற்கு முன் வந்த நர்சின் கழுத்தில் வெட்டினார். 

இதில், பலத்த காயத்துடன் இருந்தவரை, நர்சின் தந்தை கருப்பு, காளையார்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சதீஸ், எஸ்.ஐ., ராதாகிருஷ்ணன் ஆகியோர், ராஜாவின் மனைவி பாக்கியத்தை கைது செய்தனர். வாக்குமூலம் : எனது கணவர், தொடர்ந்து 2 ஆண்டுகளாக நர்சுடன் பழகி வந்தார். இருவரையும் பலமுறை கண்டித்தேன். கேட்கமறுத்து தொடர்ந்து பழகியதால்,நர்சை கொலை செய்ய திட்டமிட்டேன். மூன்று நாட்களாக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு தனியாக வீட்டிற்கு வரும்போது, அரிவாளால் வெட்டி கொலை செய்தேன், என, பாக்கியம் போலீசார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.

Wednesday, January 2, 2013


என் விஷயத்தில் அம்மா தலையிடுவதில்லை- கடல் துளசி

மணிரத்னம் இயக்கியுள்ள கடல் படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் துளசி. இவர் மாஜி நடிகை ராதாவின் மகள் என்பதால், அவரது தலையீடு நிறைய இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் வெளியான செய்திகளை அடுத்து, துளசியை புக் பண்ண இயக்குனர்கள் தயங்கி வருகின்றனர். ஆனால் இந்த தகவல் ராதாவின் காதுக்கு சென்றபோது, நான் எனது மகள்கள் கார்த்திகா, துளசி இருவர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்குகூட சென்றதில்லை. அந்த அளவுக்கு அவர்களை இயக்குனர்களின் முழுபொறுப்பில் விட்டு வருகிறேன் என்று கற்பூரம் அடித்து சத்யம் செய்து வருகிறார்.

இதை உறுதிப்படுத்த இப்போது கடல் படத்தில் நடித்துள்ள துளசியும் தன்னை சந்திக்கும் சினிமா நபர்களிடம் இதை தெளிவுபடுத்தி வருகிறார். முக்கியமாக, எனக்கான கதை கேட்கும்போது மட்டும் அம்மா உடனிருப்பார். ஆனால் கதை எல்லோருக்கும் பிடித்து விட்டது என்கிறபட்சத்தில் கதையில் அப்படி மாற்றம் செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்ற எந்தவித கமெண்டும் அவர் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்துக்கே வருவதில்லை. அதனால் என் விசயத்தில் அம்மா தலையிடுகிறார் என்று வெளியான தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வருகிறார் துளசி.

டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த சிசு
நியூயார்க்: பிரசவத்தின் போது, டாக்டரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளிவரும்படியான படம் தற்போது பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், கிளாண்டெல் பகுதியைச் சேர்ந்தவர் ரான்டி அட்கின்ஸ். இவரது மனைவி அலிசியா அட்கின்ஸ். கர்ப்பமாக இருந்த அட்கின்ஸ் கடந்த அக்டோபர் மாதம் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நிவியா என பெயரிடப்பட்டுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த ரான்டி, பிரசவத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை, டாக்டரின் கை விரலை அழகாக பிடித்துக்கொண்டே வெளி வந்தது. இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த டாக்டர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார். தற்போது இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். மேலும், படத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


மாணவருக்கு கத்திக்குத்து காதலியின் தந்தை கைது
மதுரை : மதுரையில் காதல் பிரச்னையில், கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார்.
மதுரை நாகமலை பூமிநாதன் மகன் வெற்றிவேல், 20. இவர், பி.காம்., இறுதியாண்டு மாணவர். பல்கலை ஊழியர் மணியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)மகள் உமா, 20. இவர், வேறு ஒரு கல்லூரியில் பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். இவரும், வெற்றிவேலும் ஏழாண்டாக காதலித்து வந்தனர்.
இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் சென்ற வெற்றிவேலை வழிமறித்த மணியன் கத்தியால் குத்தினார். அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணியனை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.


மனைவி கொலை கணவர் சரண்
சோழவந்தான் : சோழவந்தான் ஆர்.சி. பள்ளி தெற்குதெருவைச் சேர்ந்தவர் கோபால்,49. இவரது மனைவி சாரதா, 42, மகள்கள் தாரணி,8, மோகனா,4. மனைவி நடத்தையை கோபால் சந்தேகித்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை, சாரதா தலையில் போட்டு கொலை செய்தார். நேற்று காலை போலீசில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எஸ்.ஐ., ஜோசப் ரவிச்சந்திரன் விசாரிக்கின்றனர்.


திறந்தவெளியில் சத்துணவு சமையல்
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் திறந்தவெளியில் சத்துணவு தயாரிப்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் 312 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு தனியாக அமைக்கப்பட்ட சத்துணவுக்கூடத்தில் அவர்களுக்கான உணவு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கூரை மற்றும் கதவுகள் பழுதடைந்தது. சத்துணவுக்கூடத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் திறந்தவெளியில் சுகாதாரமற்ற நிலையில் சமையல் தயாரிப்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பள்ளி தரப்பில் கூறியதாவது: திறந்தவெளியில், மழைக் காலங்களில் சமைப்பதுதான் சிரமமாக உள்ளது. சிலநாட்கள் வகுப்பறை வராண்டாவில் சமைக்குமாறு தலைமையாசிரியை சொன்னார். பின், புகை படிவதாகக்கூறி, அனுமதி மறுத்ததால் மீண்டும் திறந்தவெளியிலேயே சமைக்கிறோம். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பழுதடைந்த கூடத்தில் வைப்பதால் பாதுகாப்பில்லை. மழைக்கு நனைந்து வீணாவதாலும் அரிசி மூட்டைகளை மட்டும் வகுப்பறையில் வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளனர். இடியும் நிலையில் உள்ள மேற்கூரை, கதவு ஆகியவற்றை பழுதுநீக்கித் தரும்படி அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, என்றனர்.


தண்ணீரின்றி நெல், பருத்தி, மக்காசோளம் பேரையூர் தாலுகா விவசாயிகள் கண்ணீர்
பேரையூர்:பேரையூர் தாலுகாவில், 
ஆயிரக்கணக்கான ஏக்கர் 
பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, மக்காசோளம் பயிர்கள், தண்ணீரின்றி கருகியதால் 
விவசாயிகள் கண்ணீரில் 
மூழ்கியுள்ளனர்.
இத்தாலுகாவில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல், 4 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், 4 ஆயிரம் ஏக்கரில் பருத்தி, சோளம், கம்பு போன்ற தானிய வகைகள் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. மழை இல்லாததால் இத்தாலுகாவில், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், 60 சதவீதம் நெற்பயிர்கள் இதுவரை முற்றிலும் கருகிவிட்டன. "40 சதவீதம் நெற்பயிர்களிலும் மகசூல் இருக்காது,' என்கின்றனர் விவசாயிகள். 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி முற்றிலும் கருகிவிட்டன. இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 
திருமால், பெரியபூலாம்பட்டி: 
4 ஏக்கரில் நெல் நடவு செய்தேன். உழவு, நடவு, அடி உரமிட ரூ.70 ஆயிரம் செலவிட்டேன். ரூ.50 ஆயிரத்துக்கு நகைகளை அடகு வைத்தேன். 90 நாட்கள் பயிர்களுக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர்கூட கிணற்றில் இல்லாததால் பயிர்கள், அனைத்தும் கருகிப்போச்சு. அடகு வச்ச நகையை எப்படி திருப்புவது என்று நினைத்தாலே கண்ணுமுழி பிதுங்குது. அரசு நிவாரணம் அளிக்கவேண்டும்.
வேலு: முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு வறட்சியை, இத்தாலுகாவில் நான் பார்த்ததில்லை. காய்ந்த நெல்லினுடைய வைக்கோல் கூட விற்பனையாகவில்லை. ஆடு, மாடுகளுக்கு தீனியாகின்றன. ஏராளமான விவசாயிகள் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
பாண்டியம்மாள்: மூன்று ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டேன். ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவானது. ஆனால், ஒரு மக்காசோள கதிரில் கூட உருப்படியான விளைச்சல் இல்லை. விளையாத கதிர்களை அழிப்பதற்கு செலவிட கூட எங்களுக்கு சக்தியில்லை. அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.


புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், உடன் தங்க போதுமான இடமின்றி, மருத்துவமனை வெளியில் உள்ள கழிவறைகளில் தங்கள் இரவுப்பொழுதை கழித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவிலான நோயாளிகள் காரணமாக மருத்துவமனை தற்போது திணறி வருகிறது. இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில் படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான். இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான். தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும் கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டில்லி அரசு வீடில்லாதவர்களுக்காக சுமார் 150 இல்லங்களை கட்டி வைத்துள்ளது. ஆனால் அவற்றை தவிர்த்து 3 லட்சம் மக்கள் தற்போது வீதிகளில், உறைய வைக்கும் பனியில் தங்கி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த பதில், பனியை விட உறைய வைக்கிறது அவர்கள் தரும் இல்லங்கள். ஆம். அந்த இல்லங்களில் தங்குவதை விட கழிவறைகளில் தங்கி விடலாம் என்றே இங்கு வந்துள்ளதாகவும், கழிவறைகளை விட அந்த இல்லங்கள் அவ்வளவு மோசமாகவும், சுகாதாரக்கேடாகவும் இருப்பதாக கூறுகின்றனர் அங்கு சென்று திரும்பியவர்கள்.
புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள், உடன் தங்க போதுமான இடமின்றி, மருத்துவமனை வெளியில் உள்ள கழிவறைகளில் தங்கள் இரவுப்பொழுதை கழித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனை. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவிலான நோயாளிகள் காரணமாக மருத்துவமனை தற்போது திணறி வருகிறது. இந்நிலையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டில்லியில் கடும் பனி நிலவுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி, புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் உ.பி., மாநிலம் புலந்தர்ஷார் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு இதுவரை மருத்துவமனையில் படுக்கை வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு கண்களையும் இழந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் தினமும் இரவு அருகிலுள்ள கழிவறை ஒன்றில் தங்கி வருகிறான். இவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் கழிவறையிலேயே தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தங்குவது மட்டுமின்றி, சமைப்பதும் கூட அங்கு தான். தற்போது கடும் குளிர் காரணமாக வீடிழந்தோரும் கழிவறைகளை நோக்கி வருவதால், அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டில்லி அரசு வீடில்லாதவர்களுக்காக சுமார் 150 இல்லங்களை கட்டி வைத்துள்ளது. ஆனால் அவற்றை தவிர்த்து 3 லட்சம் மக்கள் தற்போது வீதிகளில், உறைய வைக்கும் பனியில் தங்கி வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த பதில், பனியை விட உறைய வைக்கிறது அவர்கள் தரும் இல்லங்கள். ஆம். அந்த இல்லங்களில் தங்குவதை விட கழிவறைகளில் தங்கி விடலாம் என்றே இங்கு வந்துள்ளதாகவும், கழிவறைகளை விட அந்த இல்லங்கள் அவ்வளவு மோசமாகவும், சுகாதாரக்கேடாகவும் இருப்பதாக கூறுகின்றனர் அங்கு சென்று திரும்பியவர்கள்.